விருஷ்ணீநாம் வாஸூதே3வோ sஸ்மி பாண்ட3வாநாம் த4நஞ்ஜய:/
முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஸநா கவி:// (அத் 10 ஸ்லோ 37)
“வ்ருஷ்ணீ வம்ஸத்தில் வாசுதேவன் நான், பாண்டவர்களில் அர்சுனனாகிய நீயும் நான், முனிவர்களுள் வ்யாஸர் நான், இந்திரியங்களுக்கு எட்டாத விஷயங்களை ஞான திருஷ்டியால் அறிபவர்களுள் சுக்ராச்சார்யர் நான்”
யாதவர்களில் வாசுதேவனின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் சாக்ஷாத்ரூபம். பகவானும் பகவானின் அவதார ரூபமும் ஒன்றே. மூல முதற்கடவுளான ஸ்ரீமந்நாராயணனான பகவானே ஸ்ரீகிருஷ்ணராக அவதாரமெடுத்திருக்கிறார் என்று இங்கே பகவானால் சொல்லப்படுகிறது. அவதார ரூபத்திற்கும்மூலரூபத்திற்கும்வேறுபாடு இல்லை. பாண்டவர்களுள் யுதிஷ்ர மகாராஜா மிகப்பெரியவர். யாரிடமும் குற்றம் குறை காணாத அர்சுனன் பகவானின் அன்புக்கு பாத்திரரானவர். பகவானின் சிறந்த பக்தர். பகவானுக்கு நெறுங்கிய நண்பர். எனவே அர்சுனனை பகவானின் ஸ்வரூபம் என்கிறார். வேதவ்யாஸ பகவான் முனிகளில் சிறந்தவர். வேதங்களைப் பாகுபாடு செய்தவர். மஹாபாரதம் புராணங்கள் போன்ற பகவானின் லீலைகளை தெரிவிக்கும் சாஸ்த்ரங்களை இயற்றியவர். பகவான் வ்யாஸரை தன் ஸ்வரூபம் என்கிறார். சுக்ராச்சார்யர் ப்ருகு குலத்தின் தலைவர். சிறந்த கவிஞானம் பெற்றவர். ஸஞ்ஜீவனி வித்யையை அறிந்தவர். கவிகளில் சிறந்தவர். முக்கியமானவர். எனவே பகவான் இவரை தன் ஸ்வரூபம் என்றுக் கூறுகிறார். ஸ்லோகத்தின் உட்கருத்து “வ்ஷ்ணி வம்ஸமான யாதவ வம்ஸத்தில் வசுதேவரின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணனாக (ஸாக்ஷாத் ரூபமாக) இருக்கிறேன். பாண்டவர்களிடையே உத்தமனான அர்சுனனுக்கு நியாமகனாய், செல்வங்களை ஜெயிப்பவனாகையால் தனஞ்ஜெய என்ற ஸப்தவாச்யனாய் அர்சுனனில் இருப்பவன். முனிகளில் வேதவ்யாஸர் நானே (ஸாக்ஷாத் ரூபம்). கவிகளுள் ஸ்ரேஷ்டரான சுக்ராச்சாருக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு உஸனஸ் ஸப்த வாச்யனாய் கவியிலிருப்பவன் நானே”. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 9) (படைப்பு: ஆதிமைந்தன்) இதைத் தொடர்ந்து, ஒருநாள், அச்சுதப்ரோக்ஷரின் நண்பரும் சன்யாசியுமான ஒருவர் அனுமான ஸாஸ்த்ரத்தில் சிறந்த பாண்டித்யம் பெற்று அகங்காரத்துடன் தனது சீடர்கள் சிலருடன் “பஞ்சாயவாக்யம்” என்னும் தத்துவத்தை பிரயோகித்து ஜீவ பரமாத்மா பேதத்தை அனுமானத்தாலே எளிதில் நிரூபிக்க முடியும் என்று கூறி ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார். ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள், அனுமானத்தை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு நிரூபிக்கும் முயற்சியில் ஏற்படுகின்ற தோஷங்களை விளக்கி, ஆகமங்களின் துணையும் அவசியம் என்பதை எடுத்துக்காட்டினார். ஸ்ரீமதாச்சார்யரின் வாதத்தை மறுக்க முடியாத அச்சீடர்கள், உடனே இவ்வுலகம் சிப்பியால் தோன்றும் வெளிளியைப் போன்றது பொய்யானது என்றனர். அதற்கு ஸ்ரீமதாச்சார்யர்ரோ, இவ்வுலகம் நம் முன்னே தோன்றும் (பிரத்யக்ஷ்யமாக) பானை மற்றப் பொருள்களைப் போன்று (இவ்வுலகம்) சத்யமானது என்றார். சீடர்கள்: தாங்கள் கூறிய பிரத்யக்ஷம் என்னும் வாதத்தால் “அதிவியாப்தி” தோஷம் இருப்பதாகக் கூறினார், அதாவது, கண்ணால் காண்பதெல்லாம் உண்மை (சத்யம்) என்றால் சிப்பியில் வெள்ளி இருப்பது உண்மையாகிறது. ஸ்ரீமதாச்சார்யர்: சிப்பியில் வெள்ளியாகத் தோற்றமளித்ததே ஒழிய அது அறியத்தக்கது அல்லவே. ஏனென்றால் அது இல்லாத ஒன்று. அந்த சிப்பியில் வெள்ளி என்ற பொருள் இல்லையே. எனவே அது ஞான சம்மந்தமான விஷயம் இல்லை. அனுமானத்திற்கு தேவையான நியதியும் அங்கு இல்லை. இல்லாத ஒரு பொருளை உதாரணமாக எடுத்துக்கொண்டு வாதிடுவதில் நியாயமில்லை. ஆனால் பானையும் கண்ணில் தோன்றும் மற்ற பொருள்களும் உண்மையானவை சத்யமானவை. அவ்வாறான சரியான ஆதாரங்களைக் காரணம் காட்டியே நாம் வாதிடவேண்டும் என்பதாக “பிரபஞ்ச மித்யா” ஆத்வானுமான வாதத்தை முறியடித்தார். ஒரு பொருளை அறிய அனுமானம் மட்டும் போதாது என்றும், அப்பொருளை பிரமாணமென்றோ அப்பிரமாணமென்றோ கூற ஆகமம் மற்றும் பிரத்யக்ஷம் அவசியம் தேவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் வாதிட்டதால் கற்றோர் சபையில் “அனுமான தீர்த்தர்” என்று பாராட்டப்பட்டார். ஒரு சமயம், புத்திசாகரன் என்ற பெளத்தர், வேதம் பொய்யானது என்றும் வேதநாயகனான ஈஸ்வரனை துவேஷித்தும், தாம் மிகவும் கற்றவன் என்ற அகங்கார தோரணையுடன் வாதிசிம்மன் என்னும் சீடரைஅழைத்துக்கொண்டு ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார். வாதிசிம்மன் எடுத்துவைத்த வாதத்திற்கெல்லாம் சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் தகுந்த ஆதாரங்களுடன் பதிலளித்து, அவர்களை இரவோடு இரவாக சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிட செய்துவிட்டார். (தொடரும்)
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/