Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, March 26, 2011

சாரல் 05 துளி 01 தேதி 27.03.2011


'குருஅருளில்லையேல் இறையருளில்லை'
அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே/
தேஷாம் நித்யாபி4யுக்தாநாம் யோக3க்ஷேமம் வஹாம்யஹம்//
            ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சார்யர் இப்பூவுலகில் அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமஹாபாரதம் போன்றவற்றில் புதைந்து கிடந்த பகவானின் ஸந்நிதானத்தின் உண்மையான தத்துவத்தை உலகினுக்கு எடுத்துரைத்து, அதன் மூலம் ஹரி ஸர்வோத்தம தத்துவத்தை உபதேஸித்தார்கள். அதைத் தொடர்ந்து ஸ்ரீமதாச்சார்யரின் சீடர்களாக ஸ்ரீடீகாச்சார்யர், ஸ்ரீவ்யாஸராஜர், ஸ்ரீபாவபோதகர், ஸ்ரீபரிமளாச்சார்யர் போன்ற மஹான்கள் ஸ்ரீமதாச்சாரியரின் போதனைகளை ஆமோதித்து அனேக க்ரந்தங்களின் மூலம் நமக்கு போதனைகள் செய்திருக்கிறார்கள். அவர்களின் வழிவந்தவர்களில், தம் இளம் வயதிலேயே ஸ்ரீஹரியின் சிந்தனையாளராய், ஸம்சாரத்தைத் துறந்து, பிரம்மச்சாரியாகவே இருந்து, ஸந்யாசத்தை ஏற்று, ஸ்ரீமூலராமரின் ஸேவைக்காகவே தம் வாழ்வினை அர்ப்பணித்து, ஸ்ரீஉத்ராதிமடத்தின் தற்போதைய பீடாதிபத்யத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற, கண்களால் காணும் ப்ரத்யக்ஷ்குருவான ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களை பக்தியுடன் நமஸ்கரித்து, பக்தி முரசுவின் இந்த ஐந்தாமாண்டின் முதல் துளியை ஸ்ரீகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கிறேன். இத்தொடரின்போது (கீதையின் சாரலில்) எனக்கு ஏற்படுகின்ற ஸம்சயங்களை அவ்வப்போது நீக்கி, உண்மையான தத்துவத்தை மட்டுமே எடுத்துச் சொல்ல எனக்கு சக்தியையும், யோக்யதையும் கொடுத்தருள வேண்டுமாய் மானசீகமாகவும், ஆத்மார்த்தமாகவும், உள்ளன்போடும், பக்தியோடும் ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களை வணங்கி ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன். அத்துடன் இந்த இதழ்களை பக்தியோடும் ஸ்ரத்தையோடும் படித்துவரும் வாசக பக்தர்களுக்கு திடபக்தியும், ஞானத்துடன் கூடியதான வைராக்யமும், ஐஸ்வர்யமும் அருளிச் செய்ய வேண்டுமாய் ஸ்ரீகளை வேண்டுகிறேன். யோகச்க்ஷேமத்தை அடைய அருள்புரிய வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன். கீழ்வரும் த்யானப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.

ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே- உன்
பாத கமலங்களை நம்பி - நீயே
கதியென சரண்புகுந்தேன் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

கண்முன்தோன்றா ஹரியை - என் 
மனதில் தோன்றச் செய்திடுவாய்
என்மீ திருக்கும் மாயை - உன்
கையில் பறித்துச் சென்றிடுவாய் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

நேரில் தோன்றும் குருவே - நீ
ராம தூதனென நம்பிடுவேன்
தேரில் உன்னை அமர்த்தி - உன்
பெருமை யாவும் சொல்லிடுவேன் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

உன் நாமம் ஒன்றே போதும் - என்
தேவை யாவும் தீரும்
உன் பக்தி ஒன்றே வேண்டும் - என் 
சித்தம் என்றும் மகிழும் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

சீதாராமர் உன் தெய்வம் - ஸத்ய
ப்ரமோத தீர்த்தரும் உன் குருவே
ஆதிமைந்தன் பாடுகிறேன் - உன்
கருணைக்காக ஏங்குகிறேன் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)
(இப்பாடலை பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும் பாடுவோருக்கு ஞானவைராக்யம், திடபக்தி சித்திக்கும், ஐஷ்வர்யம் மேன்மைபெறும்)

ஹரி ஓம் - (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம:)
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூ4த ப4வ்ய ப4வத்ப்ரபு4:
பூ4தக்ருத்3 பூ4தப்4ருத்3 ப4ாவோ பூ4தாத்மா பூ4தப4ாவன: 1.
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதி:
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ sக்ஷர ஏவ ச 2.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே//

Tuesday, March 15, 2011

சாரல் 4 துளி 51 தேதி 20.0.11 (2nd page)


சென்ற பக்கத்தின் தொடர்ச்சி 3 பக்கம்
ஸ்லோகம் :19
3ஹூநாம் ஜந்மநாமநந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்3யதே/
வாஸூதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூது3ர்லப://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பிறவிகள் பல கடந்தும் வாசுதேவனே எல்லாம் என்று அறிந்தவன் என்னை அடைகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அறிது.
ஸ்லோகம் : 20
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்3யந்தேஅந்யதே3வதா:/
தம் தம் நியமமாஸ்த2ாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பெறும்பாலோர் ஆசையால் அறிவிழந்து தங்களுடைய பூர்வ கர்மத்தின் ஸ்வபாவத்தால் தூண்டப்பட்டு வேறு தேவதைகளை சரணடைகிறார்கள்.
ஸ்லோகம் :21
யோ யோ யாம் யாம் தநும் ப4க்த: ஸ்ரத்3த4யார்சிதுமிச்ச2தி/
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்3த4ாம் தாமேவ வித3த4ாம்யஹம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எவனெவன் எந்தெந்த தேவதையை பூஜிக்க விரும்புகிறானோ, அந்த பக்தனுக்கு அந்த தேவதையிடமே புத்தியை ஸ்திரமாக இருக்கச்செய்கிறேன்.
ஸ்லோகம் :22
ஸ தயா ஸ்ரத்3த4யா யுக்தஸ்தஸ்யாராத4நமீஹதே/
லப3தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எதை எந்த தேவதையிடம் ஸ்ரத்தையுடன் வேண்டினாலும் அது என்னால் தீர்மானிக்கும் அளவே அவனுக்கு கிடைக்கிறது.
ஸ்லோகம் :23
அந்தவத்து ப2லம் தேஷாம் தத்3ப4வத்யல்பமேத4ஸாம்/
தே3வாந்தே3வயஜோ யாந்தி மத்3ப4க்தா யாந்தி மாமபி//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "தேவதைக் கொடுக்கும் பலன் அழிவுள்ளது என்னைத் துதிப்பது அழிவற்றது.
ஸ்லோகம் :24
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாம பு3த்3த4ய:/
பரம் ப4ாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "நான் இணையற்றவன், அழிவற்றவன், பிறப்பற்றவன், இறப்பற்றவன்-மனதிற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட மேலான என்னை மனிதனைப்போல் நினைப்பவன் மதியீனன்.
ஸ்லோகம் : 25
நாஹம் ப்ரகாஸ: ஸர்வஸ்ய யோக3மாயாஸமாவ்ருத:/
மூடே4ாஅயம் நாபி4ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "யோக மாயையில் மறைந்துள்ள என்னை பிறப்பு-இறப்பு உள்ளவனாக நினைக்கும் மனிதன் (மூடே4ாயம்) மூடனே.
ஸ்லோகம் : 26
வேத3ாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சர்ஜூந/
ப4விஷ்யாணி ச பூதாநி மாம் து வேத3 ந கஸ்சந//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "காலங்கள் மூன்றும் நான் அறிவேன், பக்திஇல்லாதவன் என்னை அறியான்.
ஸ்லோகம் : 27
இச்ச3ாத்3வேஷஸமுத்தே2ந த்3வந்த்3வமோஹேந ப4ாரத/
ஸர்வபூ4தாநி ஸம்மோஹம் ஸர்கே3 யாந்தி பரந்தப//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "இரட்டைகள் வடிவான மயக்கத்தினால் உயிர்கள் அறியாமையை அடைகின்றன. (இரட்டைகள் என்பது விருப்புவெறுப்பு, சுகம்துக்கம், மகிழ்ச்சிதுயரம், லாபநஷ்டம் போன்றவைகளாகும்)
ஸ்லோகம் : 28
யேஷாம் த்வந்தக3தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்/
தே த்3வந்த்3வமோஹநிர்முக்தா ப4ஜந்தே மாம் த்3ருட4வ்ரதா://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "இரட்டைகளை விலக்கி பயன் கருதாமல் சிறந்ததைச் செய்பவன் என்னை வழிபடுவான்.
ஸ்லோகம் : 29
ஜராமரணமோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே/
தே ப்3ரஹ்ம தத்3விது3: க்ருத்ஸ்நமத்4யாத்மம் கர்ம சாகி2லம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "மூப்பு மரணத்தில் விடுபட என்னை சரணடைந்து என்னையே துதிப்பவன் ப்ரம்மம் கர்மம் அறிவான்.
ஸ்லோகம் : 30
ஸாதி4பூ4தாதி3தைவம் மாம் ஸாதி4யஜ்ஞம் ச யே விது3:/
ப்ரயாணகாலேஅபி ச மாம் தே விது3ர்யுக்தசேதஸ://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "அதிபூதம், அதிதைவம், அதியக்ஞம் என்று என்னை யார் அறிகிறார்களோ அவர்கள் என்னிடத்தில் மனதை வைத்து மரணத்தருவாயில் நினைத்தாலும் என்னையே அடைகிறார்கள்.

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் / 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//


ஜிதந்தே ஸ்தோத்ரம் (தமிழாக்கம் by வாயுமித்ரன்)
ஜிதந்தே ஸ்தோத்ரம் பிரம்மதேவனால் பரமாத்மாவைக் குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாகும். இந்த ஸ்தோத்திரத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஜிதந்தே என்ற வார்த்தையுடன் ஆரம்பமாவதால் இது ஜிதந்தே எனப்பெயர்பெற்றது. இச்ஸ்தோத்ரம் ஐந்து அத்யாயங்களைக் கொண்டது. 'ஜிதந்தே' என்றால் "உன்னுடைய மகிமை குறைவற்றதாயிருக்கட்டும்" என்று பொருள். இது பாஞ்சராத்ராகம மஹோபநிஷத்தில் இடம்பெற்றதாகும். பிரார்த்தனையின் முறை அபூர்வமானது. பரமாத்மாவுடன் ஜீவன் நேரடியாகப் பேசும்வண்ணமானக் கருத்தைக்கொண்டது. ஜீவனின் இயல்பையும், குணங்களையும அவ்வாறே பரமாத்மாவின் வர்ணனையும், ஜீவனின் பரமாத்மாவைக் குறித்த ப்ரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது. வேதத்தின் சாரமாகும் இந்த ஸ்தோத்திரம். மனிதனையும், பரமாத்மாவையும், துல்லியமாக கனிக்கிறது இந்த ஸ்தோத்திரம். மிகவும் கொடுமையானதும், எல்லைகள் அற்றதும், ஆழம் காணமுடியாததும், கடக்கக் கஷ்டமானதும், முடிவில்லாத துன்பங்களின் இருப்பிடமாவதும், பயமுறுத்துவதும், புலன்களின் சுழற்சியால் நிரம்பப்பட்டிருக்கிறதுமான இந்த சம்சார சாகரத்தில் ஒவ்வொரு ஜீவனும் அவனுடைய கர்மாதீனத்தினாலே சுக துக்கங்களை அனுபவித்து வருகிறான். 
மனிதன் என்பவன், சிறியவன், நன்றி கெட்டவன், தீய செயல்களை புரிபவன், பாபங்களின் தொகுப்பானவன், ஆயிரக்கணக்கான தோல்விகளின் பெட்டகம், பாதுகாப்பு மற்றும் ஆதரவு இல்லாதவன், ஏமாற்றமடைந்தவன், வெற்றியில்லாதவன், வறுமையில் உழல்பவன், வேதனை அளிப்பவன், தீயவைகள் புரிபவன், கொடூரமானவன், வஞ்சனைபுரிபவன், நா காக்காதவன், பிடிவாதக்காரன், பரமாத்மாவைத் தவிர வேறு புகலிடம் இல்லாதவன், துன்பத்திற்கு இருப்பிடமானவன், நல்ல நடத்தை இல்லாதவன், மூன்றுவித தாபங்களின் வெப்பத்தினால் எரிந்து கொண்டிருப்பவன், பிறப்பு, வியாதி, முதுமை, இறப்பு என்னும் நிலைகளினால் துன்பம் அடையக்கூடிய தேகம் எடுத்தவன். எந்த நற்குணமும் இல்லாதவன், மூடன், பலமற்றவன், தீயனவற்றில் விருப்பமுள்ளவன், தன்னுடைய முயற்சிகளில் வெற்றி பெறாதவன், ஏமாற்றத்திற்குட்பட்டவன்.
இதற்கு மாறாக பரமாத்மாவோ, ஐஸ்வர்யம், வீர்யம், யஸஸ், க்ஞானம் மற்றும் விக்ஞானம் என்னும்படியான ஆறுகுணங்களை முழுமையாக உடையவ்ன். அவன் பேரானந்த ஸ்வரூபன். அவனே மிக உயர்ந்த பிரம்மன். அவனே அனிருத்தன், பித்யும்னன், சங்ர்ஷணன், வாசுதேவன் என்ற வடிவங்களில் பிரகாசிக்கிறவன். எல்லா மங்களகரமான குணங்களின் மொத்த உருவம் அவன். உலகை ஆக்கலும், காத்தலும் அழித்தலும் அவனே. சராசரங்களில் உறையும் எல்லாப் பொருட்களைக்காட்டிலும் உத்தமன் அவனே. ஸ்ரீலட்சுமியின் நாதன் அவன். அவனுடைய பாதாரவிந்தத்தை தேவர்களும் ரிஷிகளும் பூஜிக்கிறார்கள். ஆனந்த பூர்ணன் அவன். பிரகாசத்தின் கருவூலம் அவன். குணங்களைக் கடந்தவன். நான்முகனுக்கும் முந்தியவன். அவனுடைய ஞானமும். சக்தியும் அளவிடமுடியாதன. பிரபஞ்சமும், பிரபஞ்சத்தைவிட வேறானவனும், முடிவில்லாதவனும் அவனே. சாஸ்வதமானவன், தோஷமற்றவன், ஈடில்லாதவன், தேவர்களுக்கெல்லாம் தேவன், ப்ரபஞ்சத்தின் தலைவன், ஸ்வதந்திரன், ஆசைகளற்றவன், அதிகாரி, பெயர்க்கமுடியாதவன், அனைத்திலும் முழுமையானவன். அவனின் ஞானம், பலம் மற்றும் யோகம் சாஸ்வதமானவை. பிரபஞ்சத்தில் பிரம்ம ருத்ராதி தேவதைகளின் கர்த்தவ்யத்தை ஊக்குவிப்பவன். பக்தர்களுக்கு பிரியமானவன். பிரபஞ்சத்தை படைப்பவனும் அழிப்பவனும் அவனே. பிரபஞ்சத்தின் உரிமையாளனும் வழிகாட்டியும் அவனே. வெற்றிகொள்ள முடியாதவன். மிகவும் மகிமை பொருந்தியவன். வேதங்களினால் அறியப்படுபவன். தோற்றம், நிலைத்தல், முடிவு ஆகியவைகளுக்கு காரணகர்த்தா அவனே.
மேற்கண்டவாறு இருவேறு குணங்களைக் கொண்டிருக்கும் மனிதனும், பரமாதமாவும் உறவுகொள்ள முடியுமா என்றால் முடியும் என்று அறைகூவுகிறது இந்தச் ஸ்லோகம்.
பரமாத்மாவை அடைய யாகம், யக்ஞம் இவைகள் அவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வேதத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை அநேகர் அறிவதில்லை. விதிக்கப்பட்ட கர்மம் எது, ஒதுக்கப்பட்ட கர்மம் எது என்பது கூட அறியாதிருக்கிறார்கள். அறிந்திருக்கும் சிலரோ அதைக் கடைப்பிடிக்க சக்தியற்றவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள், ஐம்புலன்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பவர்கள். அவர்களின் தேகம் வியாதியின் சித்ரவதைக்கும், மனம் ஐம்புலன்களின் ஆளுகைக்கும், வாக்கு உண்மையல்லாத மற்றும் கடுமையானதுமான மாசுகளுக்கும், வசமாயிப்பதால் சக்தியற்றவர்களாயிருக்கின்றனர். மேலும், நாம் செய்வது நல்ல செயல் என்று நினைத்துக்கொண்டு உண்மையில் சாஸ்திரத்தில் ஒதுக்கப்பட்ட தீய செயலை புரிந்துவிடுவோமா என்ற பயத்தின் காரணமாகக் கூட சிலர் ஒதுங்கி விடுகின்றனர். அறியாமை, சக்தியின்மை, சோம்பேரித்தனம், மனதில் தோன்றும் தீய எண்ணம், முயற்சி இருந்தும் வெற்றி பெறாமை போன்றவைகள் வேறு சில காரணங்களாகின்றன. பின் பரமாத்மாவை அடைய என்னதான் வழி?
அவனுடைய பாதாரவிந்தங்களில் சரணடைந்து அவனின் கருணையை யாசிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மனிதன் சரமாகதன், சரணார்த்தி , பரமாத்மாவே சரண்யன், ப்ரபன்னமாகும் (சரணடையும்) ஜீவனுக்கு பரமாத்மா பிரஸன்னமாகிறார். மனிதன் தவறுகளின் மொத்த உருவம் என்றால், அன்பு, தயை மற்றும் கருணையின் மொத்த உருவம் பரமாத்மா. பலவிதமான கடமைகளை பரமாத்மா விதித்திருந்தாலும், அவனுக்கு மிகவும் உகந்த அவர்மீது வைக்கும் அத்யந்த பக்தியின் மூலம் அவனது அளப்பறிய மகிமைகளை அறிந்து கொண்டுவிடலாம்.
பிரபஞ்ச நன்மைக்காகவே பிரம்மாவைப் படைத்ததைக் காட்டிலும், நரசிம்மாதி அவதாரங்களை எடுத்திருந்ததைக் காட்டிலும், ப்ராருக்த ரூபமே இல்லாதபோதிலும், பக்தர்களின் சந்தோஷத்திற்காக ரூபங்களை தரித்ததைக் காட்டிலும் வேறு என்ன மகிமைகளை பகவான் பக்தர்களின் ப்ரீத்திக்காக செய்ய வேண்டும்?
தான் பரமாத்மாவின் சேவகன், சீடன், மற்றும் குழந்தை என்றும் பரமாத்மா தனக்கு எஜமானன், குரு, மாதா, பிதா, நண்பன், சகோதரன், மகன், உறவினன் என்றும் மனிதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கவேண்டும். கல்வி, செல்வம், மற்றும் மனிதன் விரும்பும் அனைத்தும், பரமாத்மாவின் வெகுமதியாகும். ஆகையால் மனிதன், தன்னுடைய பலமின்மை மற்றும் அனுகூலமின்மை ஆகியவைகளை புரிந்துகொண்டு பரமாத்மாவை சரணடைந்தால் செய்த தவறுகளை மன்னித்து தன்னுடைய ப்ரீதியினாலும், கருணையினாலும் அவனைக் காப்பாற்றுகிறார்.
பக்தனுக்கு பரமாத்மா தனிப்பட்ட சொந்தம். அழகே உருவானவர், சர்வலங்கார பூஷிதன், தெய்வீக ஆபரணங்களைத் தரித்தவர் அவரின் ஹிருதயம் கருணையே வடிவெடுத்தது. அவரின் கடாக்ஷமே பொங்கும் மங்களத்தை அளிக்க வல்லது. சொந்த கண்களினால் பகவானைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமாக பக்தன் இருக்க வேண்டும். எவ்விடத்திலும், எந்நேரத்திலும் பகவானின் சேவகனாக இருக்க பக்தன் மிகவும் பிரியப்பட வேண்டும். எந்த ஒரு செயலையும் பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சாக்ஷாத் ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடிய வைகுண்டபதியாகிய பரமாத்மா மோக்ஷத்திலும் தனக்கு இடும் கட்டளைளை எதிர்நோக்கி பக்தன் ஆவலுடன் இருக்க வேண்டும். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் இவைகளில் எந்த பற்றுதலும் இல்லாமல் பரமாத்மாவின் சேவகனாக, அவனின் பாதாரவிந்தங்களில் அடைக்கலம் புகுவதையே பக்தன் ஆசைப்பட வேண்டும். அனைத்து பிறப்புகளிலும், வைஷ்ணவனாக இருக்க வேண்டுமென்றே ஆசையைத் தவிரவேறு ஆசை எதுவும் அவனுக்கு இல்லை என்பதாக இருக்க வேண்டும். அவனுடைய ஒரே ஆசை பரமாத்மாவின் அன்பும் கருணையும் பெறுவதுதான். எங்கு பிறந்தாலும் எப்படிப்பட்ட பிறவி எடுத்தாலும், எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் ஸ்ரீஹரியின் சேவகனாகவே இருக்க ஆசைப்பட வேண்டும். 
இப்படிப்பட்ட ஆசையுள்ள பக்தன் பரமாத்மாவை அடைகிறான் என்பதில் இருவேறு கருத்துக்கள் உண்டோ!

பக்தி முரசு என்ற இந்த இதழ் ஒரு பக்க வாராந்திர இதழ். இதில் கீதையின் சாரலில் என்னும் தொடரில் ஸ்ரீமத்பகவத்கீதையின் 12,7,8,9 ஆகிய அத்யாயங்களின் உட்கருத்துக்கள் வெளிவந்துள்ளன. தற்போது 10வது அத்யாயத்தின் 27வது ஸ்லோகத்தை பாராயணம் செய்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இறுதி மலரை சிறப்பு மலராக வெளியிட்டு வருகிறோம். அதுபோலவே இந்த இதழ் நான்காம் ஆண்டின் சிறப்பு மலராக வெளிவந்துகொண்டிருக்கிறது. வெளியூர்களில் இருக்கும் ஆர்வமுள்ள வாசக பக்தர்கள் இந்த இதழை ஒவ்வொரு வாரமும் இணையதளத்தில் இலவசமாக படித்து மகிழலாம். இணையதள முகவரி (Internet address) www.Bhakthimurasu.blogspot.com. என்ற விலாசத்தில் தனிக் கட்டணம் ஏதுமின்றி படித்து மகிழலாம். பரமாத்மனின் அருளும், ஆசியும் நம்மீது விழ என்றென்றும் ப்ரார்த்தனை செய்வோமாக
ஏகம் ஸாஸ்த்ரம் தே3வகீபுத்ர கீ3த-
மேகோ தே3வோ தே3வகீபுத்ர ஏவ/
ஏகோ மந்த்ரஸ்தஸ்ய நாமாநி யாநி
கர்மாப்யேகம் தஸ்ய தே3வஸ்ய ஸேவா//

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

இப்படைப்பினை உத்ராதிமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ1008ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களில்
 பணிவுடனும் பக்தியுடனும் நமஸ்கரித்து சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே/
ஸஹஸ்ரநாமதத்துல்யம் ராமநாம வராநதே//

ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத்பூர்ணமுத3ச்யதே/
பூர்ணஸ்ய பூர்ணமாத3ாய பூர்ணமேவாவஸிஷ்யதே//
பாவபோதக்ருதம் ஸேவே ரகூத்தும மஹாகுரும்/
யச்சியஷ்ய சிஷ்ய சிஷ்யாத்யா டிப்பணயாசார்ய ஸம்ஜ்ஜிதா//
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச/
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே//
மோத3தீர்த்தகராப்ஜோத் தஸத்யாத்மயதி ஸேகரம்/
நமாமி அனிஷம் ப4க்யா தத்வஞானார்த ஸித்த4யே//





ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

வெளியீடு : கீதை சேவா டிரஸ்ட் & ஜனனி DTP சென்டர் , மணம்பூண்டி, திருக்கோவிலூர் தாலூகா

சாரல் 4 துளி 51 தேதி 20.03.11 (this year end)

ஸ்ரீமத் பகவத் கீதையின் "ஜ்ஞான விஜ்ஞான யோகம்" (7ம் அத்யாயம்)
வாஸூதேவஸூதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்/
தேவகீ பரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்//
ஸ்ரீமத் ஹனுமத் பீ4ம மத்4 வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிற்கும் அர்சுனனுக்குமிடையேயான உரையாடலின் தொகுப்பே ஸ்ரீமத்பகவத்கீதை. இதில் 1 முதல் 6 அத்யாயங்கள் வரை கர்மயோகம் என்றும் 7 முதல் 12 அத்யாயங்கள் வரை பக்தியோகம் என்றும் 13 முதல் 18 வரை ஞான யோகம் என்றும் கருதப்படுகிறது. 
வாழ்க்கையில் மனிதன், துக்கத்திலிருந்தும், லெளகீக விஷயங்களிலிருந்தும் விடுபடவும், ஆனந்த ரூபமான மோக்ஷத்தை அடைவதற்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத்பகவத்கீதையின் மூலம் நமக்கு அருள் பாவிக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். கீதை மனித வாழ்க்கைக்கு ஒரு சட்டநூல் என்ற கண்ணோட்டத்தில் நாம் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளவேண்டும். போக்குவரத்து விதிகளை மீறினால் விபத்து ஏற்படுவது போல, கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் வாழ்க்கைக்கான விதிமுறைகளை மீறினால், வாழ்க்கை என்னும் பயணத்தில் விபத்துக்களைத் தவிர்ப்பது கடினமாகிறது. 
ஸ்ரீமத் பகவத்கீதையில் ஜ்ஞான விஜ்ஞான யோகம் என்னும் 7ம் அத்யாயத்தின் சாராம்சத்தையும், அதைத் தொடர்ந்து ஸ்லோகங்களையும், அதன் உட்கருத்துக்களையும் இந்த ஒருபக்க இதழின் நான்காம் ஆண்டின் இறுதி மலராகவும் சிறப்புமலராகவும் சமர்ப்பிக்கிறோம்.
'ஞானம்' என்பது பகவானைப்பற்றி அறிவது. அதாவது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பூர்ணமானவர் என்றும், சர்வோத்தமன் என்றும் புரிந்துகொள்வது ஞானமாகும். அதுபோலவே ஸ்ரீகிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் அதிபதி. ஆக்கலும் அழித்தலும் அவரே போன்ற தத்துவங்களை உணர்ந்து, ஸ்ரீமத்பாகவதம் போன்ற நூல்களிலிருந்து பகவானின் லீலைகளையும், அவனின் சக்தியையும் அறிந்து அவனுடன் உறவுகொண்டாடுவது 'விஜ்ஞானம்' ஆகும். இந்த ஞானத்துடன் கூடிய விஜ்ஞானத்தை கலந்து "ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே" என்பதாக பகவானின் பூர்ணத்துவ பரதத்துவத்தை உணர்வதே பகவானை அறிவதாகும். இந்த அத்யாயத்தில் இந்த தத்துவத்தை பகவான் எடுத்துரைக் கிறார்.
அத்யாயச் சுருக்கம் : 
அர்சுனன் : கேசவ ! ஸ்ரத்தையான பக்தியுடன் உன்னை தியானிப்பவன் உயர்ந்தவன் என்று கூறினாய். நான் உன்னையே நினைந்து, உன்னையே தியானித்து உன்னைப்பற்றி அறிய வேண்டும். அதற்கான உபாயத்தைச் சொல் கிருஷ்ணா, என்று கேட்கிறான்.
ஸ்ரீகிருஷ்ணர் : அர்சுனா! ஆழந்த மனதுடன் என்னையே நினைந்து நினைந்து நெக்குறுகினாயானால் என்னைப் புரிந்து கொள்ள வழிகிடைக்கும்.
அர்சுனன் : கிருஷ்ணா! உன்னைப் புரிந்துகொள்வதென்பது என்ன அவ்வளவு அரிதா? அப்படியானால் எவ்வளவோ மனிதர்கள் உன்னை உணர்ந்திருக்கிறார்களே!
பகவான் : பரந்தபா! ஆயிரம் மனிதர்களில் ஒருவனே என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னைத் தத்வரீதியாக அறிகிறான்.
அர்சுனன் : வாசுதேவ! உன்னின் அருமை பெருமைகளை எனக்கு பூர்ணமாக உபதேஸிக்க வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன். 
பகவான்: நீண்ட புஜங்களையுடைய அர்சுனா! இந்த உலகமனைத்தையும் படைப்பவனும் அழிப்பவனும் நானே. எல்லாமும் அசேதன மற்றும் சேதப் ப்ரக்ருதியிலிருந்து உண்டானவை. அசேதனன் என்பது அறிவில்லாத ஜடவஸ்து. சேதனன் என்பது அறிவுள்ள வஸ்து. என் வசமாய் உள்ள ஜடப் ப்ரக்ருதிகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களும் சேர்ந்து ஆக எட்டு விதமாகப்பிரிந்து என் வசமே உள்ளது. இவைகள் மட்டுமல்லாமல் அதன் அபிமானியான பிரம்மா முதல் அனைத்திற்கும் தாயுமான சேதனப்ரக்ருதியான ஸ்ரீமஹாலட்சுமி தேவியும் என்வசமே என்று தெரிந்துகொள். ஸ்ரீலட்சுமி தேவியால் இவ்வுலகம் தாங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரபஞ்சத்தை நானே தோற்றுவிக்கிறேன். நானே நாஸம் செய்கிறேன். என்னைவிட உயர்ந்த பொருளும், எனக்கு நிகரான பொருளும் முக்காலத்திலும் இல்லை. பல மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும் ஒரு நூல் மணிகளைத் தாங்கிக்கொண்டிருப்பது போல இவ்வுலகம் அனைத்தும் என்னிடம் கோர்க்கப்பட்டுள்ளது. நானே கண்களுக்கு புலப்படாமல் இருந்துகொண்டு யாவற்றிலும் நிரைந்திருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்.
குந்தியின் மைந்தா அர்சுனா! நானே நீர், சந்திரன், சூர்யன், வேதம் ஆகாஷம், மனுஷன் ஆகிய அனைத்திலும் அதனதன் தத்துவமாக இருக்கிறேன். யாவற்றிற்கும் வித்தாகவும், அறிவாளிகளின் அறிவாகவும், பலசாலிகளின் பலமாகவும் நானே இருக்கிறேன். 
மேலும் பரதவம்ஸத்தில் தலைசிறந்தவனே அர்சுனா! நான் பலசாலிகளிடம் ஆசையும் பற்றும் இல்லாத பலமாகவும் (வலிமை) ஜீவர்களிடம் தர்ம ஸாஸ்திர ஸம்பிரதாயத்திற்குட்பட்ட காமத்தில் காமனாகவும் இருக்கிறேன். முக்குண உணர்வுகளும் நானே, ஆயினும் அவற்றில் நானும் அவை என்னிடமும் இல்லை, என்று சொன்னான் கீதாசாரியன்.
அர்சுனன் : மதுசூதனா! 'நீயே எல்லாமும் என்கிறாய், ஆனால் 'அவற்றில் நான் இல்லை' என்று கூறுவதன் பொருள் எனக்கு புரியவில்லையே? விளக்கமாகக் கூறு' என்றான் அர்சுனன்.
பகவான்: அர்சுனா! எங்கும் நிறைந்து யாவற்றையும் ஆட்டுவிப்பவன் நானே என்பது வாஸ்துவமே. ஆனால் இவையாவும் லீலைகளே அன்றி இவற்றினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. ஒரு ஜீவன் உடல் ரூபத்தை பெற்று அந்த உடலால் பலன்களை அனுபவிக்கிறான். 'சரீரமாத்யம் கலு தர்மஸாதன' என்பது போல, அந்த ஜீவன் உடலினுள் இருந்துகொண்டே எல்லா நற்காரியங்களையும் செய்ய வேண்டும். அந்த ஜீவன் உடலிலிருந்து பிரிந்துவிட்டால் அந்த உடல் ஜடமாகிறது. ஆக சரீரத்தால் ஜீவனுக்கு நிறைய உபகாரங்கள் உண்டு. நான் எவ்வித பலனையும் கருதி எந்தக்காரியத்தையும் செய்யவில்லை. அதில் எனக்கு ஒட்டுதலில்லை. அதனால் நான் அதில் இல்லை என்றேன், மேலும் ஸாத்வீக, ராஜஸ, தாமஸ குணத்தால் மயங்கும் ஜீவன்கள் என்னின் அருமைபெருமைகளை தெரிந்துகொள்வதில்லை.
அர்சுனன்: மாதவா! நீ எங்கும் நிறைந்திருக்கிறாய். எல்லாவற்றையும் நீயே செய்விக்கிறேன் என்கிறாய், ஆனால் எங்களுக்கு கண் இருந்தும் உன்னைக் காணமுடியவில்லையே அது ஏன்?
பகவான்: பரந்தபா! நீ கூறுவது வாஸ்தவமே. கண் இருந்தாலும் என்னை உங்களால் காணமுடியாது. உங்களுக்கும் எனக்கும் நடுவே திரை ஒன்று உள்ளது. அதுவே என்னைக் காணமுடியாதபடிச் செய்கிறது.
அர்சுனன்: கண்ணா! அப்படியா! அத்திரை எதுவோ? அதையார் விரித்திருக்கிறார்கள்? விளக்கமாகக் கூறு.
பகவான்: அத்திரைக்கு பெயர் மாயை. மாயை என்பது பொய்யானது அல்ல. அது மஹாசக்திபெற்றது. முக்குணமுடையது. மனிதன் அனுபவிக்கும் பொருள்கள் அனைத்துமே மாயையின் செயல்பாடுதான். அந்த மாயா சக்தியை நானே விரித்திருக்கிறேன். ஜீவர்கள் அனேக பாவங்கள் செய்கிறார்கள். அதனால் அவர்கள் என்னைக் காணக்கூடாது என்பதற்காக நான் விளையாட்டாக விரித்த வலை அது. எவ்வளவு பல சாலியாக இருச்தாலும் அத்திரையை விலக்கி என்னைக் காணமுடியாது.
அர்சுனன்: வாசுதேவா! ஜீவர்களெல்லாம் பாவிகளா? ஜீவர்கள் உன்னைக் காண்வேண்டும் என நினைத்தால் அது சாத்தியம் இல்லையா?
பகவான்: அர்சுனா! என்னையே எப்போதும் புகலாகக் கொண்டு சரணாகதி அடைந்தால் மாயையை எளிதில் கடக்கலாம்.
அர்சுனன்: உன்னை சரணாகதி அடைந்தால் மாயைக் கடக்கலாம் என்றால் ஏன் எல்லோராலும் இயலவில்லை?
பகவான்: அர்சுனா! என்னை உயர்ந்தவனென்று யாரும் நினைப்பதில்லை. என்னைக் கடவுளென்று நினைக்காதவர்கள் அதிகம். அதனால் நான் கூறும் உபதேஸத்திற்கு அவர்கள் செவிமடுக்கவா செய்வார்கள்! 
அர்சுனன்: ஜகத்பதியே! மனிதர்கள் இப்படிக்கூடவா இருக்கிறார்கள். அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களிடையேயான வேறுபாடுகள் என்ன? யாவற்றையும் விள்கமாகக் கூறு.
பகவான்: பாவம் செய்தவர்கள் நான்கு வகையினர் உண்டு. அறிவிழந்தவன்(மூடன்) அசுரத்தன்மை கொண்டவன், மனிதரில் தாழ்ந்தவன், மாயையில் உழல்பவன் போன்றோர் என்னைத் துதிக்க மாட்டார்கள். 
மூடர்களானவர்கள் தேகாத்ம விவேகமில்லாதவர்கள். என் மீதான சிந்தனை அற்றவர்கள். உலகலெளகீக சுகங்களே பெரியதென எண்ணி காலம் கழிக்கும் ஸம்சாரிகள் இவர்கள்.
அசுரத் தன்மைக்கொண்டவர்கள் குரூரமான பாவங்கள் செய்தவர்கள். இவர்கள் ராவணன் ஹிரண்யன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிறவி முதற்கொண்டே என்னை த்வேஷிப்பவர்கள்.
மனிதனில் தாழ்ந்தவன் அப்பாவி. நான் மஹாசக்தி பெற்றவன் என்ற நினைவால் என்னை நெருங்க அஞ்சுபவன். பகவானின் நாமங்களைச் சொன்னாலே போதும் அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்னும் தெளிவுஇல்லாதவன்.
மாயையில் உழல்பவர்கள் என்னை வஞ்சிப்பவர்கள். அதிக பாவம் செய்தவர்கள். கபடமான பேச்சுடையவர்கள். அறிவு(பகவானின்) மிகக் குறைந்தவர்கள்.
அர்சுனன்: கேசவா! உன்னைத் துதிக்காமல் பாவம் செய்தவர்களின் வகையினரைச் சொல்லிவிட்டீர். அப்படியானால் உலகில் புண்ணியம் செய்தவர்களே இல்லையா? அவ்வானவர்கள் எவ்வகையைச் சேர்ந்தவர்கள்?
பகவான்: பரதவம்ஸத்தல் சிறந்தவனே அர்சுனா! புண்ணியசாலிகளில் நான்கு வகையினர் உண்டு. அர்த்தார்த்தீ, ஆர்த்தன், ஜீஜ்ஞாஸூ, ஞானி. இவர்களில் ஞானியைத் தவிர ஏனையோர் ஏதோ ஒரு பலன் கருதி என்னை வேண்டினாலும் அவர்கள் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களே.
செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு என்னைத் துதிப்பவன் அர்த்தார்த்தீ; துன்பத்தில் சிக்குண்டு அதிலிருந்து விடுபட என்னைப் ப்ரார்த்திப்பவன் ஆர்த்தன்; என்னிடம் பக்திகொண்டு என்னை அறிய முயற்சிகளை மேற்கொள்ள ஞானத்தைத் தேடுபவன் ஜீஜ்ஞாஸூ; என்னை ஸ்த்ரமாக த்யானித்து அறிந்துகொண்டவன் ஞானி. இவன் 'வாசுதேவம் ஸர்வம்' என்ற ஞானம் பெற்று மற்ற ஆசைகளிலிருந்து விடுபட்டவன்.
அர்சுனன்: வாசுதேவா! அந்த புண்ணியசாலிகளுள் ஞானி ஏன் சிறந்தவன்?
பகவான்: அர்சுனா பக்தனில் ஞானி சிறந்தவன், நான் அவனுக்கும் அவன் எனக்கும் பிரியமானவன். மேற்சென்ன நால்வகை பக்தரும் சிறந்தவரே யாயினும் என் ஸ்வரூபமான ஞானியே மிகவும் உயர்ந்தவன் சிறந்தவன்.
ஞானியே பலன் ஏதுமின்றி என்னை உபாஸிப்பவன். ஞானிக்கு பலன், உபாயம் எல்லாம் நான்தான். என்னிடம் மட்டுமே அவன் ப்ரீத்திகொண்டவன். ஆயினும் அவன் என்னிடம் பக்தி கொண்டு அன்பு செலுத்திய பின்பே நான் அவனை நேசிக்கிறேன். என்னையே அவன் பெற விரும்புவதனால், என்னையே நான் அவனுக்கு கொடுக்கிறேன்.
அர்சுனன்: கண்ணா! உன்னை வணங்குவோருக்கு உன்னையே கொடுக்கிறேன் என்கிறாய், அவ்வாறாயின் பிற தேவதைகளை வணங்குவோரின் நிலை எப்படி?
பகவான்: பிறவிகள் பல கடந்தும் 'வாசுதேவம் ஸர்வம்' என்று அறிந்தவன் என்னை அடைகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அறிது.
பெறும்பாலோர் ஆசையால் அறிவிழந்து அவர்களுடைய பூர்வ கர்மத்தின் ஸ்வபாவத்தால் தூண்டப்பட்டு வேறு தேவதைகளை சரணடைகிறார்கள்.
எவனெவன் எந்தெந்த தேவதையை பூஜிக்க விரும்புகிறானோ, அந்த பக்தனுக்கு அந்த தேவதையிடமே புத்தியை ஸ்ரமாக இருக்கச் செய்கிறேன். 
எதை எந்த தேவதையிடம் ஸ்ரத்தையுடன் வேண்டினாலும் அது என்னால் தீர்மானிக்கும் அளவே அவனுக்குக் கிடைக்கச் செய்கிறேன்.
அர்சுனன்: மற்றற தேவதைகளை வணங்குவது உன்னை வணங்குவது போல் ஆகுமா?
பகவான்: தேவதைக் கொடுக்கும் பலன் அழிவுள்ளது, என்னைத் துதிப்பது அழிவற்றது. நான் இணையற்றவன், அழிவற்றவன், பிறப்பற்றவன், இறப்பற்றவன், மனதிற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட மேலான என்னை மனிதனைப்போல் நினைப்பவன் மதியீனன். நான் யோகமாயையில் மறைந்துள்ளேன். என்னைப் பிறப்பு இறப்பு உள்ளவனாக நினைக்கும் மனிதன் மூடனே. பல வருடங்களுக்கு முன் இறந்துபோன் ஸாந்திபனியுன் புத்திரனை கொண்டுவந்தேனல்லவா! கார்யவைகுண்டத்திலிருந்து வைதீக புத்ரர்களை அழைத்துவந்தேனல்லவா! கரியாக இருந்த பரிக்ஷித்தை குமாரனாக ஆக்கினேனல்லவா! இதெல்லாம் சாதாரண மனிதன் செய்யக்கூடிய செயலா!
அர்சுனன்: தேவதேவா! நீ இணையற்றவன், அழிவற்றவன் என்றால், உன்னை எல்ரோரும் ஆஸ்ரயிக்காமல் சிலரே த்யானித்து வணங்கு கின்றனர். இதன் மர்மமென்ன?
பகவான்: காலங்கள் மூன்றும் நான் அறிவேன். பக்தி இல்லாதவன் என்னை அறியமாட்டான். மேலும் இரட்டைகள் வடிவான -சுகம்துக்கம், விருப்புவெறுப்பு, மகிழ்ச்சிதுயரம், லாபநஷ்டம்-போன்ற மயக்கத்தினால் மனிதன் அறியாமையை அடைகிறான். இவ்வாறான இரட்டைகள் வடிவானவற்றை விலக்கி பலன் கருதாமல் சிறந்ததைச் செய்பவன் என்னை வழிபடுவான்.
அர்சுனன்: கிருஷ்ணா! முக்தி மார்கத்திற்கான வழிதான் என்ன?
பகவான்: மூப்பு மரணத்திலிருந்து விடுபட என்னைச் சரணடைந்து என்னையே துதித்தால் ப்ரம்மம் கர்மம் அறிந்து மோக்ஷ்சோயுபாயத்திற்கான மார்க்கம் கிடைக்கப்பெறுவான். மேலும் அதிபூதம், அதிதைவம், அதியக்ஞம் என்று என்னை யார் அறிகிறாாகளோ அவர்கள் என்னிடத்தில் மனதை வைத்து மரணத்தருவாயில் நினைத்தாலும் அவர்கள் தியானத்துடன் கூடிய மனதையுடையவர்களாகிறார்கள். த்தை
ஸ்லோகம் : 1
மய்யாஸக்தமநா: பார்த2, யோக3ம் யுஞ்ஜந்மத3ாஸ்ரயா:/ 
அஸம்ஸயம் ஸமக்3ரம் மாம் யத2ா ஜ்ஞாஸ்யஸி தச்ஸ்2ருணு// 
ஸ்லோகத்தின் உட்கருத்து : "ஆழ்ந்த மனதுடன் என்னையே கதியென்று ஐயமின்றி முழுமையாக நீ அறிவாயோ, அவ்வாறே சொல்வேன். கேள் பார்த்தா!"
ஸ்லோகம் :2
ஜ்யாநம் தேsஹம் ஸவிஜ்ஞாநமித3ம் வக்ஷ்யாம்யஸேஷத:/
யஜ்ஜ்ஞாத்வா தேஹ பூயோs ந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸிஷ்யதே //
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எதை அறிந்தபின் மீதம் அறியவேண்டியதில்லையோ அதை ஞானவிஜ்ஞான தத்துவமாய் உனக்கு சொல்வேன்"
ஸ்லோகம் :3
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித்3யததி ஸித்3த4யே /
யததாமபி ஸித்த4ாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "ஆயிரம் மனிதர்களில் ஒருவன் என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னை தத்வரீதியாக அறிகிறான்."
ஸ்லோகம் :4
பூ4மிராபோ sநலோ வாயு: கம் மநோ பு3த்3திரேவ ச/
அஹங்கார இதீயம் மே பி4ந்நா ப்ரக்ருதிரஷ்டத4ா//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "என் வசமாய் உள்ள இந்த ஜடப்ரகிருதிகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் மனம், புத்தி, நெருப்பு ஆகிய மூன்று தத்துவங்களும் சேர்ந்து ஆக எட்டு விதமாக பிரிந்து (என் வசமே) உள்ளது."
ஸ்லோகம் :5
அபரேயமிதஸ்வந்யாம் ப்ரக்ருதிம் வித்3தி4 மே பராம்/
ஜீவபூ4தாம் மஹாப3ாஹோ யயேத3ம் த4ார்யதே ஜக3த்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : " நீண்ட புஜங்களையுடைய அர்சுனா! இந்த அபரா ப்ரகிருதி தாழ்ந்தது, இதைவிட உயர்ந்த எனது பரா ப்ரகிருதியான ஸ்ரீலக்ஷ்மி தேவியால் இந்த ஜகத் முழுவதும் தாங்கப்பட்டுள்ளது என்பதை அறி."
ஸ்லோகம் :6
ஏதத் யோனீனி, பூ4தானி, ஸர்வானீத்யுபத4ாரய/
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரப4வ: ப்ரளயஸ்தத2ா//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எல்லா உயிரினங்களும் இந்த ஜட மற்றும் சேதனப்ரக்கிருதியிலிருந்து உண்டானவை என்று தெரிந்து கொள், மேலும் உலகமனைத்தையும் படைப்பவனும் அழிப்பவனும் நானே".
ஸ்லோகம் :7
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித3ஸ்தி த4நஞ்ஜய/
மயி ஸர்வமித3ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக3ணா இவ//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "என்னைவிட உயர்ந்தது இவ்வுலகில் இல்லை. ஒரு நூலிலுள்ள மணிகளைப் போல இவ்வுலகம் என்னிடம் கோர்க்கப்பட்டுள்ளது".
ஸ்லோகம் :8
ரஸோs ஹமப்ஸூ கெளந்தேய ப்ரப4ாஸ்மி ஸஸிஹூர்யயோ /
ப்ரணவ: ஸர்வவேதே3ஷூ ஸப்3த3: கே2 பெளருஷம் ந்ருஷூ //
ஸ்லோகத்தின் உட்கருத்து : "குந்தியின் மைந்தா அர்சுனா! நானே நீர்-சந்திர-சூர்ய-வேத-ஆகாஷ-மனுஷ அகிய அனைத்திலும் அதனதன் தத்துவமாக உள்ளேன்".
ஸ்லோகம் :9 
புண்யோ க3ந்த4: ப்ருதி2வ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விப4ாவஸெள/
ஜீவநம் ஸர்வபூ4தேஷூ தபஸ்சாஸ்மி தபஸ்விஷூ//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "அனைத்தின் ஆதாரமும் நானே, மண் நெருப்பு தபஸ் தத்வமும் நானே".
ஸ்லோகம் :10
பீ3ஜம் மாம் ஸர்வபூ4தாநாம் வித்3தி4 பார்த2 ஸநாதநம்/
பு3த்3தி4ர்பு3த்3தி4மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "குந்தி புத்திரனே! யாவற்றிக்கும் வித்தாகவும், அறிவாளிகளின் அறிவாகவும், பலசாலிகளின் பலமாகவும் நானே இருக்கிறேன்".
ஸ்லோகம் :11
ப3லம் ப3லவதாம் சாஹம் காமராக3விவர்ஜிதம்/
த4ர்மாவிருத்3தே4ா பூ4தேஷூ காமோ sஸ்மி ப4ரதர்ஷப4//
ஸ்லோகத்தின் உட்கருத்து : பரதவம்சத்தில் தலைசிறந்தவனே அர்சுனா! நான் பலசாலிகளிடம் ஆசையும் பற்றும் இல்லாத பலமாகவும் (வலிமை) ஜீவன்களிடம் தர்ம ஸாஸ்திர ஸம்பிரதாயத்திற்குட்பட்ட காமத்தில் காமனாகவும் இருக்கிறேன்".
ஸ்லோகம் :12
யே சைவ ஸாத்த்விகா ப4ாவா ராஜஸாஸ்தாமஸாஸ்ச யே/
மத்த ஏவேதி தாந்வித்3தி4 ந த்வஹம் தேஷூ தே மயி//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "முக்குண உணர்வுகள் நானே ஆயினும் அவற்றில் நானும் அவை என்னிடமும் இல்லை".
ஸ்லோகம் : 13 
த்ரிபி4ர்கு3ணமயைர்ப4ாவைரேபி4: ஸர்வமித3ம் ஜக3த்/
மோஹிதம் நாபி4ஜாநாதி மாமேப்4ய: பரமவ்யயம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "ஸாத்வீக, ராஜஸ, தாமஸ குணத்தால் மயங்கும் ஜீவன்கள், என்னை மேலானவன், அழிவற்றவன் என்று அறிவதில்லை".
ஸ்லோகம் :14
தை3வீ ஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா/
மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "என்னையே எப்போதும் புகலாகக் கொண்டால் உலகில் மாயையை எளிதில் கடக்கலாம்
ஸ்லோகம் :15
ந மாம் து3ஷ்க்ருதிநோ மூட4ா: ப்ரபத்3யந்தே நராத4மா:/ 
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸூரம் ப4ாவமாஸ்ரிதா://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "அறிவிழந்தவன்(மூடன்) அசுரத்தன்மைக் கொண்டவன், மனிதரில் தாழ்ந்தவன், மாயையில் உழல்பவன் என்னைத் துதிக்கமாட்டான்
ஸ்லோகம் :16
சதுர்வித4ா ப4ஜசந்தே மாம் ஜநா: ஸூக்ருதிநோ அர்சுந/
ஆர்தோ ஜிஜ்ஞாஸூரர்த2ார்தீ2 ஜ்ஞாநீ ச ப4ரதர்ஷப4//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பரத வம்ஸத்தில் சிறந்தவனே அர்சுனா நால்வகை நல்ல ஜனங்கள் என்னை சேவிக்கின்றனர் அவர்கள் 1. துன்பத்தில் அகப்பட்டவன் 2. செல்வம் வேண்டுபவன் 3. பகவானை அறியவிரும்புபவன் 4. பூர்ண ஞானம் பெற்றவர்கள் ஆவார்கள்.
ஸ்லோகம் :17
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப4க்திர்விஸிஷ்யதே/
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோஅத்யர்த2மஹம் ஸ ச மம ப்ரிய://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பக்தனில் ஞானி சிறந்தவன், நான் அவனுக்கும் அவன் எனக்கும் பிரியமானவன் இனியவன்.
ஸ்லோகம் :18
உத3ார: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்/
ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "நால்வகை பக்தரும் சிறந்தவரேயாயினும் என் ஸ்வரூபமான ஞானியே மிகவும் உயர்ந்தவன்.

(இதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்....... இது இந்த ஆண்டின் சிறப்பு மலர் )

Saturday, March 12, 2011

சாரல் : 4 துளி : 50 நாள்: 13.03.11

கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)

ஆயுதா4நாமஹம் வஜ்ரம் தே4நூநாமஸ்மி காமது4க்/
ப்ரஜநஸ்சாஸ்மி கந்த3ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸூகி:// (அத்.10 ஸ்லோ.28)

கீதாசார்யர் ஸ்ரீகிருஷ்ணர் மிகவும் ஸ்ரேக்ஷ்டமானப் பொருள்களில் தன் விபூதிரூபத்தின் தத்துவம் இருப்பதை மேலும் விவரிக்கிறார். ஆயுதங்களில் சிறந்ததான வஜ்ராயுதம், பசுக்களில் சிறப்பானதான காமதேனு, தர்மஸாஸ்த்திரத்திற்கு உட்பட்டதான காமத்தில் காமதேவனாக, ஸர்பங்களுள் வாசுகியாக இருப்பதாகக் கூறுகிறார்.
வஜ்ராயுதம்: இது இந்திர தேவனுடைய ஆயுதம். ததீசி முனிவர் தபோவலிமை மிக்கவர். அவர் தேவர்களிடம் அன்புகொண்டு தன் சரீரத்தையே தியாகம் செய்து தன் முதுகெலும்பில் வஜ்ராயுதத்தை உண்டாக்கி இந்திரனிடம் கொடுத்தார். ஆயுதங்களில் சிறந்தது வஜ்ராயுதம்.
காமதேனூ: இது பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியது. மிகவும் தெய்வீக அம்ஸம் பெற்றது. பசு இனத்திற்கே சிறப்பிைன்க் கொடுப்பது. தேவர்களும் மனிதர்களும் தாம் வேண்டிய பொருளை கொடுக்கும் சக்திபெற்றது. பசுக்களில் சிறந்தது காமதேனு.
காமதேவன்: மன்மதன் என்று அழைப்பர். கந்தர்பன் என்றும் கூறுவர். இவர் இனஉற்பத்திக்கு உகந்ததான காதல் கடவுள். "தர்மாவிருத்3தோ4 பூ4தேஷூ காமோ sஸ்மி " என்பதாக VII-11ல் கூறுவதைப் பார்க்கிறோம். சிறந்த ஜனன வ்ருத்திக்காக மனிதன் ஏற்கும் காமம் கிருஹஸ்தர்ஸிரமத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வாஸூகி : இது ஒரு தலைப் பாம்புகளுக்குத் தலைவன். அமுதம் கடைந்தபோது இது கயிறாகப் பயன்படுத்தப்பட்டது. இது ஸர்பங்களில் சிறந்தது எனப்பட்டது.
ஸ்லோகத்தின் உட்கருத்து: ஆயுதங்களில் உகந்ததான வஜ்ராயுதத்திற்கு நியாமகனாய், தோஷமற்றவனாய், "வஜ்ர' என்னும் பெயருடையவனாய் வஜ்ராயுதத்தில் இருக்கிறேன். பசுக்களில் காமதேனுவிற்கு நியாமகனாய் கேட்கும் பொருள்களைக் கொடுப்பதனால் "காமது4க்" என்ற பெயருடன் காமதேனுவில் இருக்கிறேன். ஸாஸ்த்திர விதிமுறைகளுக்குட்பட்ட ஸ்ருட்டிக்கு காரணனான மன்மதனுக்கு நியாமகனாய், பல்வேறு சுகங்களை அனுபவித்துக்கொண்டு "கந்தர்ப:' என்னும் பெயருடையவனாய் மன்மனனுள் இருக்கிறேன். ஸர்பங்களில் ஒரு தலையினையுடைய வாசுகி என்னும் ஸர்பத்திற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, தன் லோகத்தில் வசிப்போருக்கு சுகத்தைக் கொடுப்பவனாதலால் வாஸூகி என்னும் பெயருடன் வாஸூகியில் நான் இருக்கிறேன்.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : குருக்ஷேத்ர போரில் கீதையின் உதயம் : ( சென்ற இதழின் தொடர்ச்சி) ( சென்ற இதழின் தொடர்ச்சி) 
"எதனால் இந்தச் சோர்வு" அர்சுனனுக்கு உண்டான இந்த நடுக்கம் பாசத்தால் உண்டானது. இளகிய கருணையால் உண்டானது. தன் உற்றார் உறவினர்கள் அனைவரும் இப்போரில் மரணம் எய்துவார்களே என்ற துக்கத்தால் உண்டானது. இப்போரின் மாபெரும் இழப்பைக் கருதி உண்டானது. (இப்போரின் இறுதியில் பத்து வீரர்கள் மட்டுமே பிழைத்திருந்தார்கள் என்று கூறப்படுகிறது) மாவீரன் அர்சுனனுக்கு ஏற்பட்ட இந்த நடுக்கமும் சோகமும், பயத்தால் உண்டானது இல்லை. அர்சுனனின் வீரம் பிரசித்தி பெற்றது.
கீதையின் உதயம் : இவ்வாறு போர்களத்தில் பாசத்தால் தளர்ச்சியடைந்து "போர்புரியமாட்டேன்" என்று அமர்ந்துவிட்ட அர்சுனனை, சாரதியாக இருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கடமையைச் செய்யுமாறு உபதேசம் செய்கிறார். அதன் சாராம்சமே ஸ்ரீமத் பகவத்கீதை. இங்க கீதை உதயமாகிறது. தீயசக்திகளுக்குச் தடுப்புச் சுவர் இது. பக்திமானுக்கு வற்றாத நீரோடை இது. "தவம், பக்தி இல்லாதோருக்கும் கேட்க விருப்பம் இல்லாதோருக்கம் என்னிடம் குறைகாண்போருக்கும் இந்த கீதா உபதேசத்தை உரைக்காதே" (18-67) என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார், கீதையில் பகவான் கூறும் உட்கருத்துக்களை பகவான் மட்டுமே அறியக்கூடியவர், மேலும் ஸ்ரீகிருஷ்ணர் 18-70ல் கூறும்போது, "கீதையை ஊன்றிப்படித்தாலே போதும், என்னை ஞானத்துடன் வழிபட்டவனாகிறான்" என்பதாக கூறுகிறார். (இப்பதிப்பு சென்ற வருடம் மூன்றாமாண்டு சிறப்பு மலரில் வெளிவந்ததின் மறுபதிப்பு)
மத்வமதகொள்கைகளை விளக்கி ஸ்ரீவ்யாஸராஜர் அருளிய இருவரி ஸ்லோகம் : 
ஸ்ரீமந் மத்வமதே ஹரிப் பரதர்: சத்யம் ஜகத் தத்வதோ பேதோ ஜீவகணா ஹரேரனுசரா நீசோச்ச பா3வம் க3தா:/
முக்திர் நைஜஸூகானுபூதி அமல: பக்திஸ்ச தத்ஸாதனம் ஹ்யக்ஷாதித்ரிதயம் பிரமாணமகிலாம் நாயை வேத்யோ ஹரி://
இதன் பொருள் :
1. ஹரியே உயர்ந்தவன் 2. உலகம் உண்மை. 3. வேதங்கள் உண்மை. 4. ஜீவர்கள் ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டவர்கள். 5. ஜீவர்களுள் தாரதம்யம் உண்டு. 6. தன் ஜீவஸ்ரூபத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பதே முக்தி எனப்படும். 7. நிர்மலமான பக்தியே முக்திக்கு வழி. 8. ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் இவற்றின் மூலம்தான் ஞானம் பெற் முடியும். 9. வேதங்களின் மூலமாகத்தான் ஸ்ரீஹரி அறியக்கூடியவர்.

தகவல் முரசு : (அடுத்த இதழுடன் நான்காமாண்டு இனிதே முடிபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த இதழ் நான்காமாண்டு சிறப்பிதழாக 16 பக்கங்களில் வெளிவர உள்ளது. கீதையின் 7ம் அத்யாயச் சுருக்கம் மற்றும் ஸ்லோகங்களுடன் அதன் உட்கருத்துக்களும் பிரசுரக்கிப்பட்டுள்ளதுடன், ஜிதந்தே ஸ்தோத்ரம் (தமிழாக்கம் by வாயுமித்ரன்) விளக்கமும் இடம்பெற்றுள்ளது. வாசக பக்தர்கள் தொடர்ந்து ஆதரவு நல்கி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ப்ரீத்திக்கு பாத்திரராகுமாறு வேண்டுகிறோம். அத்துடன் இந்த ஆண்டு ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2011 வரையிலான ஆண்டுச் சந்தா ரூ 50/- என உயர்த்தப்பட்டுள்ளது. வாசக பக்தர்கள் பொருத்தருளுமாறு வேண்டுகிறோம்.

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /

 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

Sunday, March 6, 2011

சாரல் : 4 துளி : 49 நாள்: 06.03.11


கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
உச்சை: ஸ்ரவஸமஸ்வாநாம் வித்தி4 மாமம்ருதோத்3 ப4வம்/
ஐராவதம் க3ஜேந்த்3ராணாம் நராணாம் ச நாரதி4பம்// (அத்.10.ஸ்லோகம் 27

"குதிரைகளுள் உச்சைஸ்ரவஸ்; யானைகளுள் ஐராவதம்; மனிதர்களுள் அரசன் நான் எனத் தெரிந்துகொள்".
உச்சைஸ்ரவஸ்: ஒரு சமயம் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது முதலில் விஷமும் பிற்பாடு அமிர்தமும் கிடைத்தது. அமிர்தம் உண்டானபோது அதிலிருந்து உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை தோன்றியது. இது குதிரைகளில் மிகவும் ஸ்ரேஷ்டமானது. இதை பகவான் தன் ஸ்வரூபமாக காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
ஐராவதம்: சிறப்பு மிக்க யானையை கஜேந்திரன் என்பவர் கஜேந்திரன் என்ற யானையின் கால் முதலையின் வாயில் சிக்கி சுமார் ஆயிரம் ஆண்டுகள் மீளமுடியாமல் உயிருக்கு போராடியது. இறுதியில் அது ஞானம் பெற்று ஆதிமூலநாராயணா என ஸ்தோஸ்திரம் செய்ததும் பகவானே நேரில் காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார் என்பது பாகவதக் கதைகளில் கஜேந்திர மோக்ஷம் சிறப்பு பெற்றது. அந்த கஜேந்திரன் என்னும் யானைகளில் சிறந்தது ஐராவதம். இது இந்திரனின் வாகனம். இதுவும் அமிர்தம் கடையும்போது தோன்றியது. பகவான் இதன் ரூபமாகக் காட்சியளிப்பதாகத் தெரிவிக்கிறார்.
மனிதர்களுள் அரசன்: அயோத்தியை ஆண்ட அவதாரபுருஷர் பகவான் ராமசந்திரமூர்த்தி, துவாரகாபுரீஸ்வரர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, யுதிஷ்ரர், பரீக்ஷித்து மற்றும் இவர்களின் வழிவந்தவர்கள் மக்களுக்காக மக்களின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்தவர்கள். இவர்கள் தெய்வீக தகுதிபெற்றவர்கள். பொதுவாக சிறப்புபெற்ற அரசர்கள் பகவானின்பிரதிநிதிகள். தற்காலத்தில் மன்னராட்சி முறை முடிவிற்குகொண்டுவரப்பட்டு, நாடு குடியரசு பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் அரசாங்கம் அமைகிறது. இதில் சுயநலம், சுகபோகமுமே மேலோங்கி நிற்கிறது. ஹிரண்யகசிபு சுமார் 71 ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாக பாகவதத்தில் கூறப்படுகிறது. ஹிரண்யகசிபு பகவானின் த்வேஷியாக இருந்தான், ஆனால் தர்மங்களையும், நியாயங்களையும் கடைபிடித்து யக்ஞங்களையும் யாகங்களையும் அனுமதித்தவனாயும், பித்ரு ஸ்ரார்தங்களைக்கூட செய்யச் சென்னவனாய் இருந்தான். இறுதியில் அசுரத்தன்மை மேலோங்கி தெயவபக்தி இல்லாமல் போனதால் அவன் பகவானால் வதம்செய்யப்பட்டான். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : குதிரை இனங்களில் பாற்கடலில் பிறந்த உச்சைஸ்ரவத் என்னும் குதிரைக்கு இதர குதிரைகளைவிட ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு உச்சைஸ்ரவத்தில் இருக்கிறேன். யானைகளில் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானைக்கு அதிமுக்யத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, வைகுண்டத்திலிருக்கும் 'ஐர' என்னும் குளத்தை ரக்ஷித்துக் கொண்டு ஸ்ரீலட்சுமி தேவியை காப்பவனாய் "ஐராவதம்" என்னும் யானைக்குள் இருப்பதாகத் தெரிந்துகொள். மனிதர்களின் தலைவன் நானேயாதலால், மனிதர்களில் சக்ரவர்த்திகளுக்கு அதிமுக்யத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு சக்ரவர்தியில் இருப்பதாக என்னைத் தெரிந்துகொள். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : குருக்ஷேத்ர போரில் கீதையின் உதயம் : பாண்டவர்களுக்குக் கிடைத்த அளவற்ற செல்வத்தையும், நன்மதிப்பையும் கண்டு துர்யோதனன் மிகவும் பொறாமையும், பேராசையும் கொண்டான். அவைகளை அபரகரிக்கும் நோக்கில் பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைத்தான். சகுனியின் உதவியுடன் வஞ்சனை செய்து ராஜ்யத்தையும் கவர்ந்துகொண்டான். பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் முடித்து வந்தால் ராஜ்யத்தை திருப்பிக்கொடுப்பதாக சுதாட்டத்தின் முடிவில் வாக்களித்தான். அவ்வாறே பாண்டவர்கள் பதின்மூன்றாண்டுகளை முடித்தனர். ராஜ்யத்தைத் திருப்பிக்கேட்டனர். ஆனால் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டான் துர்யோதனன். பாண்டவர்கள் நிர்கதியாய் நின்றார்கள். யுத்தம் செய்து ராஜ்யத்தை மீட்டுக்கொள்ள முடிவுசெய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் தூது : பரமாத்மன் ஸ்ரீகிருஷ்ணர் இரு தரப்பினருக்கும் சொந்தக்காரர். எனவே சமாதானம் பேச த்ருதிரபாஷ்ரரின் சபைக்குச் சென்றார். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அங்கே ராஜ உபசாரம் அளிக்கப்பட்டது. பீஷ்மர், திரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் போன்ற மஹான்கள் நிறைந்த சபையில், ஸ்ரீகிருஷ்ணர் த்ருதிராஷ்ரனைப் பார்த்து, 'நீ துர்யோதனனை அடக்கி வாசிக்கச் சொல், நான் பாண்டவர்களைப் பார்த்துக்கொள்கிறேன் சமாதானமாகச் சென்றுவிடுவோம்' என்று கேட்டுக்கொண்டார். த்ருதராஷ்ரனுக்கு இதில் மனமில்லை. துர்யோதனனிடம் சிறிது அச்சமிருந்தது போலும். மண்ணாசையும் இடம் கொடுத்தது. எனவே ஸ்ரீகிருஷ்ணரின் சமாதானப் பேச்சு அங்கே எடுபடவில்லை. அச்சபையில் கூடியிருந்த மஹான்கள் எல்லாம் பரமாத்மனான ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சைக் கேட்கச் சொல்லி த்ருதராஷ்ரனுக்கு அறிவுரை கூறினார்கள். இறுதியாக ராஜா த்ருதிராஷ்ரனை அவர்கள் ஆமோதித்தார்களே தவிர யுத்தத்திற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. வந்திருப்பது சாக்ஷாத் பரமாத்மனே என்பதை அறிந்தும் கூட பீஷ்மர், த்ரோணாச்சார்யார், க்ருபாச்சாரியார் போன்றோரும் ஸ்ரீகிருஷ்ணரின் சமாதானக் குரலுக்கு உடன்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணருக்கு கோபம் உண்டானது. 'சரி அதுபோகட்டும் ஐந்து நகரங்களையாவது தானமாகக் கொடு போரை நிறுத்தி விடுவோம்' என்று கேட்டார் ஸ்ரீகிருஷ்ணர். குண்டூசி குத்தக்கூட இடம் கொடுக்க முடியாது என்று திடமாக மறுத்துவிட்டார் த்ருதராஷ்டர். உடனே அவருக்கு தன் விஸ்வ ரூபத்தைக் காண்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். மாயையால் உந்தப்பட்ட த்ருதிராஷ்டர் அப்போதும் சமாதானத்திற்கு வரவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் அங்கிருந்து கர்ணனிடம் வந்து தன்பக்கம் வந்துவிடுமாறு அழைத்தார். 'நான் செஞ்சோற்றுக் கடன்' தீர்க்கப்போவதாகக் கூறி மறுத்துவிட்டான். இறுதியாக யுத்தம் தான் என்று முடிவாகியது. குருக்ஷேத்ரப் போர்க்களம்: குருக்ஷேத்ரம் என்ற இடம் மிகவும் பெருமை பெற்ற ஒரு விசேஷமான இடம். இது தேவர்களான அக்னி, இந்திரன், ப்ரம்மா போன்றோர் தவம் செய்த இடம், குரு மஹாராஜன் இங்கே மிகஉயர்ந்த தவம் செய்தார். இங்கே இறப்பவர்கள் மிகவும் புண்ணியாத்மாக்களாகிறார்கள். இது 'தர்மக்ஷேத்ரம்' என்றும் 'புண்யக்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது. யுத்தம் தொடங்கப் போகிறது. இருபுறமும் பதினெட்டு அக்ஷெளஹிணிப் படைகள் திரண்டு நிற்கிறது. ஒரு அக்ஷெளஹிணிப் படை என்றால் 21870 ரதங்களும், 21870 யானைப்படைகளும், 645610 குதிரைப்படையும், 1,09,350 காலாட்படை வீரர்களும் சேர்ந்த ஒரு குழுமம். இவ்வாறு பதினெட்டு அக்ஷெளஹிணி என்றால் எவ்வளவு பிரமாண்டம்? 
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாபெரும் யுத்த க்ஷேத்ரத்தின் நடுவே மாவீரன் அர்சுணன்- அக்னிதேவன் கொடுத்த தங்கரதத்தின் உச்சியில் ஹனுமனின் கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்க, அதில் சித்ரரதன் என்ற கந்தர்வனல் கொடுக்கப்பட்ட நான்கு வெள்ளை வெளேறென்ற தெய்வாம்சம் பொருந்திய குதிரைகள் பூட்டப்பட்டிருக்க, தன் கையிலே தங்கத்தாலானதும் தெய்வீகமானதும் தேவர்களால் பூஜிக்கப்பட்டதுமான காண்டீவம் (வில்) இருக்க, இத்தனைக்கும் மேலாக சாக்ஷாத் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணன் சாரதியாக அமர்ந்திருக்க- அர்சுனன் எதிரியின் படையூகத்தை பார்க்க விரும்பி அதற்கு உசித்தமாக ரதத்தை கொண்டு நிறுத்துமாறு ஸ்ரீகிருஷ்ணரை வேண்டினான். அவ்வாறே கெளரவப் படையின் முக்கியஸ்தர்கள் தெரியும்படி அந்த உயர்ந்த ரதத்தை நிறுத்தினார் ஸ்ரீகிருஷ்ணர். தன் எதிரே எதிரியாய் நிற்கின்ற உற்றார் உறவினர்களைப் பார்த்தான் அர்சுனன். அங்கே- தந்தையின் சகோதரர்கள், பிதாமகன் பீஷ்மர், ஸோமதத்தர், பாஹ்வீகர் ஆகிய பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் ஒருபக்கம் நின்றிருக்கப் பார்க்கிறான். மற்றொரு பக்கம் த்ரோணாச்சாரியார், க்ருபாச்சாரியார் போன்ற குருநாதர்களைப் பார்கிறான். இன்னும் அம்மான்கள், சகோதரருடைய புத்ரர்கள், பேரர்கள், தம்முடன் விளையாடிய மித்ரர்கள் மேலும் கூட மாமன்மார்கள், உதவிசெய்ய வந்திருக்கும் படை வீரர்கள் சூழ்ந்த மாபெரும் படையை பார்கிறான் அர்சுனன். உடனே பாசம் அர்சுனனைக் கவ்விக்கொண்டது. துக்கம் அவனை பீடித்தது. மனம் கலங்கிறது. ரோமங்கள் சிலிர்த்தது. உடல் நடுங்கியது. கையிலிருந்த வில் கைநழுவ, அவனால் ரதத்தில் நிற்கக்கூட முடியாமல் சோர்ந்து அழுத கண்களுடன் ரதத்தின் படியினில் உட்கார்ந்துவிட்டான். (தொடரும்....) 

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத// 
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //