Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Sunday, December 19, 2010

சாரல்:4: துளி:40 நாள்: 26.12.10

காடகோபநிஷத்  (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)
இரண்டாவது அத்யாயம் -இரண்டாம் பகுதி தொடர்ச்சி) :
     பிம்பம் பிரதிபிம்பம் தொடர்பு : ஸ்லோகம் 9 இந்த உலகத்திலுள்ள அக்னி (சேதன அக்னி) ஒன்று. அது அநேக அம்ச வடிவங்களை உடையது. இதற்கு இணையாக அக்னி வடிவங்கள் உடையன. இதைப்போலவே அனைத்திலும் உறையும், பரமாத்மா ஒருவரே. அவர் அநேக பிம்ப வடிவங்களை உடையவர். இதற்கு இணையாக அநேக பிரதிபிம்பங்களும் (ஜீவன்களும்) உள்ளன. இவைகள் பிரதி பிம்பங்கள். பரமாத்மா பிம்பத்திற்கு முற்றிலும் வேறானவர். விளக்கம் பரமாத்மாபிம்பமாக இருப்பதால் அனைத்தையும் கட்டுப்படுத்து கிறார். மற்றவர்கள் அனைவரும், பரமாத்மாவின் பிரதிபிம்பங்களே. ஒரு உவமை மூலம் இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் விளக்கப்படு கிறது. பிரதிபிம்பம் பிம்பத்தைவிட வேறானது. அதனுடன ஒன்றுவதில்லை. ஸ்லோகம்10 :  இந்த உலகத்தில் உள்ள வாயு (சேத்தன வாயு) ஒன்று. அது அநேக அம்ச வடிவங்கள் உடையது. இதற்கு இணையாக காற்று வடிவங்கள் உள்ளன. இதைப்போலவே அனைத்திலும் உறையும் பரமாத்மா ஒருவரே. அவர் அநேக பிம்ப வடிவங்களை உடையவர். இதற்கு இணையாக அநேக பிரதிபிம்பங்களும் அதாவது ஜீவன்களும் உள்ளன. இவைகள் அதாவது பிரதிபிம்பங்கள் பரமாத்ம பிம்பத்திற்கு முற்றிலும் வேறானவை. விளக்கம் :மேற்கண்ட இரண்டு உவமானங்களிலிருந்து கீழ்கண்ட விஷயங்கள் தெரிவிக் கப்படுகின்றன. 1. பரமாத்மா ஒருவரே 2. அவர் அநேக பிம்ப வடிவங்கள் உடையவர். 3. ஜீவன்கள் அநேகம். அவைகள் பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள். ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் பிரதிபிம்பம். இந்த உதாரணங்களைக் கீழ்கண்டபடியும் ஆராயலாம். 1. அக்னி மற்றும் வாயு ஒருவரே (சேதன அக்னி அல்லது சேதன வாயு என அறியப்படுபவன். 2. இந்த அக்னியும், வாயுவும் அநேக பொருட்களில் ஒளி மற்றும் வாயு அம்சத்தில் பரவியுள்ளார். இந்த அம்சங்களே பிம்பங்கள். 3. ஒளி மற்றும் வாயுவை உள்ளடக்கிய அநேக பொருட்களிலுள்ள அசேதன அக்னி அல்லது அசேதன வாயு பிரதிபிம்பங்கள். 
மற்றவர்களின் குறைகள் பரமாத்மாவை பாதிப்பதில்லை.
ஸ்லோகம் 11 : எப்படி எல்லோருடைய கண்களாக உள்ள சூரியன், கண்களில் உறைந்து அனைவரின் கண்களையும் கட்டுப்படுத்துபவனாக, புறக்குறைபாடு களினால், புற பார்வைக் கோளாறுகளினால் பாதிக்கப்படுவதில்லையோ, அவ்வாறே யார் எல்லாவற்றிலும், உறைகிறாரோ, யார் எல்லாவற்றையும்விட முற்றிலும் வேறானவரோ, யார் ஸ்வதந்திரரோ அந்த பரமாத்மா உலகியல் துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. விளக்கம் : துன்பங்களின் மொத்த உருவாகிய ஜீவர்களில் உறையும் பரமாத்மா, அந்த துன்பங்களால் பாதிக்கப்படு வதில்லை. ஏனென்றால் அவைகளைக்காட்டிலும் அவர் முற்றிலும் வேறானவர். மற்றும் ஸ்வதந்திரமானவர். சூரியன் என்ற உவமானத்தால் இது விளக்கப்படுகிறது. எல்லோருடைய கண்களையும் சூரியன் உறைந்து கட்டுப்படுத்தினாலும், புறக்கண்களில் ஏற்படும் குறைபாடுகளினால் சூரியன் பாதிப்புக்குள்ளாவதில்லை. 2. இரண்டு கண்கள் இருப்பதை அறிய வேண்டும். ஒன்று புறக்கண்கள் மற்றது அகக்கண்கள். ஸ்லோகம் 12 : எல்லாருள்ளும் உறைபவர் யாரோ, கட்டுப்படுத்துகிறவர் யாரோ, தனித்துள்ளவரும் தனக்கு இணையானவரும் தன்னிலும் மிக்காரும் இல்லாதவரும் யாரோ, அந்த பரமாத்மா அந்த தன் ஒரு வடிவத்தை பலதரப்பட்டதாக ஆக்குகிறார். தன்னுள் உறையும் அவரை பார்க்கும் விவேகி குறைவில்லா பேரின்ப நிலையை அடைகிறான். மற்றவன் இல்லை. விளக்கம்: தன் ஒரு ரூபத்தையே பலதரப்பட்டதாக பரமாத்மா செய்கிறார் என்ற உண்மை இங்கு பேசப்படுகிறது. ஸ்லோகம் 13 : நிலையுள்ளவைகளிடத்து நிலையானவரும், உணர்பவர்களின் உணர்வாகவும், பல ஆசைகளை நிறைவேற்றும் ஒருவராகவும், தன்னுடன் உறையும் பரமாத்மாவை அறியும் விவேகி சாஸ்வதமான அமைதியை அடைவான். மற்றவன் இல்லை. விளக்கம் : பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் குணங்கள் எதுவோ, அது பிரதிபிம்பத்தையும்சாரும் என்பது விளக்கப்படுகிறது. ஸ்லோகம்14 : அது, ஏற்கனவே விவரிக்கப்பட்ட பரமாத்மா முழுமையான விவரிக்க இயலாத மேலான பேரின்ப நிலையை உடையது என விவேகிகள் அறிகிறார்கள். நான் அதை எவ்வாறு அறிவேன். (அவன் கருணையின்றி என எமதர்மன் ஆச்சரியத்தில் கூவுகிறான். நசிகேதன் கேட்கிறான்: அது ஒளிர்கிறதா அதை முழுமையாகச் சொல்லும்)  விளக்கம்: ஏற்கனவே விவரிக்கப்பட்ட பரமாத்மா மேலான பேரின்பமயமானவன் இந்த பேரின்ப நிலை முழுமையாக விவரிக்க முடியாதது. முழுமையாக புரிந்துகொள்ளவும் முடியாதது. பரமாத்மாவின் கருணையில்லாமல் எமனாலும் கூட அறிய முடியாதது. இங்கு குறிப்பிட்டிருக்கும் பரமாத்மாவின் மேலான பேரின்ப நிலையை ஒப்பிடும்போது விடுவிக்கப்பட்ட ஜீவனின் பேரின்பநிலை ஒரு இம்மி அளவுடையது. ஆகவே இங்கு விவரிக்கப் பட்டுள்ளது விடுவிக்கப்பட்ட ஜீவனின் பேரின்ப நிலையல்ல.ஆனால் பரமாத்மாவின் மேலான பேரின் நிலையே இங்கு விவரிக்கப் பட்டுள்ளது. இங்கு விவரிக்கப்பட்டுள்ள பேரின்ப நிலை முற்றிலுமாக விவரிக்கப்பட முடியாதது அல்ல. ஆனால் முழுமையாக விவரிக்கப்பட முடியாதவை. முடிந்த அளவு அதனுடைய விளக்கம் பரமாத்மாவின் கருணை யினாலே அறியப்படுகிறது என்பதை இச்ஸ்லோகங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஸ்லோகம்15 : அதைச் சூரியன் ஒளிறச்செய்வதில்லை. அவ்வாறே சந்திரனும் நட்சத்திரங்களும், மின்னலாலும் முடியாது. பின் அக்னி ஒளியுறச்செய்ய முடியும். எப்படி ? இவைகளெல்லாமே, ப்ரகாசிக்கின்ற அதனுடைய ஒளியைப்பெற்றே பிரகாசிக்கின்றன. அதனுடைய பிரகாசமே இவைகள் எல்லாவற்றையும் பிரகாசமாக்குகிறது. விளக்கம்:  இங்கு பிரகாசமாக இருப்பவைகளால் பரமாத்வை பிரகாசமடையச் செய்யமுடியாது என்பதையும், பரமாத்மாவின் பிரகாசத்தினாலேயே மற்ற எல்லாம் ப்ரகாசிக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. (காடகே உபநிஷத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் 2வது பகுதி நிறைவு) (இதன் தொடர்ச்சியை அடுத்தவாரம் கடைசிவாரத்தில் பார்க்கலாம்) 
  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
  ஹரே க்ருஷ்ண ஹரே  க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

No comments:

Post a Comment