Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, November 27, 2010

சாரல் 4 துளி 37 date : 05.12.10

அஹமாத்மா   கு3டா3கேஸ   ஸர்வபூ4தாஸயஸ்தி2த: /   
அஹமாதி3ஸ்ச   மத்4யம்      பூ4தாநாமந்த ஏவ ச // 
(அத் 10. ஸ் 20)
ஸ்ரீமதாசார்யர் அவர்கள் ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹார்ணவ: என்னும் தொகுப்பில் கூறுகிறார் : 
      யஸ்யாந்த:ஸர்வமேவேதம் அச்யதஸ்யாவ்யயாத்மன/
               தமாராதய கோவிந்தம் ஸ்தானமக்ரயம் யதிச்சஹ/          
 ஸ்ரீகிருஷ்ணரே ஆரம்பமும் முடிவுமில்லாதவர், பிறப்பு, இறப்பு, மூப்பு இல்லாதவர். "அச்சுதனிடமிருந்து இநத உலகம் உண்டாயிற்று என்றும் "எல்லாம் வாசுதேவன்" வஸமே என்றும் கூறி, ஹே! த்ருவனே! வைகுண்டத்தை அடைய விரும்பினால் அந்த கோவிந்தனை நாடு, முறைப்படி அவனைத் துதிப்பாயாக", என்று உபதேஸிக்கிறார். பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் 7ம் அத்யாயம் 10ம் ஸ்லோகத்தில் "பீஜம்மாம் ஸர்வபூதாநாம்" என்பதாக தெரிவிக்கிறார். எல்லா பிராணிகளும் தோன்றுவதற்கு வித்தாக இருப்பதாகக் கூறுகிறார்.   ஆத்மாவைப் பற்றி அறிய பல தத்துவஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டவண்ணம் இருக்கிறார்கள். ஆன்மீக ஞானத்தால் மட்டுமே ஆத்மாவையும், பரமாத்மாவையும் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவராசியினூடே ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மாவில் பகவான் அந்தர்யாமியாகக் குடிகொண்டு நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறார். நம் ஹிருதயத்தில் குடிகொண்டு நம்மை இயங்கச் செய்யும் ஆத்மாவே பரமாத்மா. அதுவே பரபிரம்மம். அந்த பரபிரம்மத்தை அறிவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் பிரம்ம ஞானம் அறிவதென்பது மிகவும் அரிதான சாதனை. பகவான் 7ம் அத்யாயம் 3ம் ஸ்லோகத்தில் 'மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஸு' - "ஆயிரம் மனிதர்களில் ஒருவன் என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னை தத்ரீதியாக அறிகிறான்", என்பதாகக் கூறுவதைபார்த்தோம்.  இச்ஸ்லோகத்தில் அர்சுனனை "குடாகேச" என்று விளிக்கிறார். அர்சுனன் உறக்கத்தை வென்றவன். அறியாமை என்னும் இருளில் உறங்கிக்கொண்டிறாமல் ஆன்மீக ஞானம் பெற்று பகவானை புரிந்துகொள்ள வேட்கை கொண்டதால் அர்சுனனை 'குடாகேச' என்று பகவான் அழைப்பதுபொருத்தமானதே. "ஸ்ரீஈசோபநிஷத்" கூறுகிறது 'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம், யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' "இப்பிரபஞ்சத்தில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சகல ஜட ஜீவப் பொருள்களும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டிலும் இயக்கத்திலுமிருக்கிறது". என்பதாக உபநிஷத் கூறுகிறது. இங்கே இச்ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும்போது, எல்லா ஜீவராசிகளின் இருதயங்களில் இருக்கும் ஆத்மாவும், எல்லா உயிர்களின் தொடக்கமும், நடுவும், இறுதியும் பகவானாகவே இருக்கிறார் என்பதை தொளிவாகக்கூறுகிறார்.  ஒரு விஞ்ஞானி ஒரு ரோபோ வை உருவாக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தானே அதை இயக்கவைத்து, இறுதியில் அதை அழிக்கவும் செய்கிறானோ, அதுபோலவே பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரும் உயிர்ப்பொருட்களை படைத்து அதனுள்ளே அந்தர்யாமியாக இருந்துகொண்டு, இயங்கச் செய்து, அவைகள் செய்யும் கர்மவினைகளுக்கேற்றவாறு பலன்களைக்                                       கொடுத்து, அவற்றை இறுதியில் அழியச்செய்கிறார் என்பதே உண்மையாகிறது.

ஸ்லோகத்தின் உட்கருத்து : "தூக்கத்தை ஜெயித்தவனே அர்சுனா நானே ஸகல ப்ராணிகளின் ஹிருதய குகையில் ஆத்மாவாய் இருப்பவன். ஸகல ப்ராணிகளின் ஸ்ருஷ்டி கர்த்தா நானே. மற்றும் ஸகல ப்ராணிகளையும் ரக்ஷிப்பவனும் நானே.                                             ஸகல ப்ராணிகளையும் நாஸம் செய்பவனும் நானே" -பகவான்ஸ்ரீகிருஷ்ணர்-  

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 
                                                                                   

Saturday, November 20, 2010

சாரல்:4: துளி:36 நாள்: 28.11.10

   காடகோபநிஷத் (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)

ஸ்லோகம் 15 : தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதைப்போன்றதாக ஆகிறதோ, ஓ நசிகேதா, அவ்வாறு முனிவர்களுள் முதல்வராக இருக்கிற (வாயு) யாரை அறிகிறாரோ அவரைப்போன்றே பரமாத்மா ஆகிறார். விளக்கம் : விடுவிக்கப்பட்ட ஜீவன்கள் பரமாத்வை போன்று ஆகிறார்களே தவிர பரமாத்மாவை ஒத்தவராக ஆவதில்லை. பரமாத்மாவை அறிந்தவர்களுள், முதன்மையானவர்களும், பரமாத்மாவை அறிந்த மற்றவர்களின் தலைவர்களாகவும் உள்ள சதுர்முக பிரம்மனும், வாயுவும், விடுதலைக்குப்பிறகு, பரமாத்வை போன்ற தன்மை உள்ளவர்களாக ஆவார்களே தவிர பரமாத்மாவுடன் ஒன்றாகமாட்டார்கள். ஆகையால் மற்ற ஜீவர்கள் பரமாத்மாவுடன் ஐக்கியனாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. (இரண்டாவது அத்யாயம் முதற்பகுதி முற்றிற்று) இரண்டாவது அத்யாயம் -இரண்டாம் பகுதி :
ஸ்லோகம் 1 : பதினொரு வாயிற்களையுடைய இந்த உடம்பை பிறவாதவனும், சர்வஞ்னனுமான பகவான் கட்டுப்படுத்துகிறார் என்பதை உறுதியாக அறிபவன் துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறான். ஏற்கனவே விடுவிக்கப்பட்டவனான (தேக அபிமானத்திருந்து) அவன் இறுதி லட்சியத்தை அடைகிறான். இது அதுவே. விளக்கம் : உடம்பு முதலியன பரமாத்மாவின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அதை தனது என்று ஒருவன் அபிமானிக்காமல் இருக்க வேண்டும் என்பது இந்த ஸ்லோகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (11 வாயில்கள் என்பது கண் 2 ;காது 2 ; நாசித்துவாரங்கள் 2 ;முகம், நாபி, ஆசனம், குறி, தலை ஆக 11 என்பதாக ஸ்ரீவேதேச தீர்தத ஸ்வாமிகள் கூறுகிறார்) கடவுள் இயல்பை பற்றிய விவரணம் : ஸ்லோகம் 2 : அவர் குற்றங்கள் அற்றவர், அனைத்தின் சாரம், வாயுவில் உறைபவர், பேரின்பமயமானவர், ஆகாயத்தில் உறைபவர், புலங்களில் உறைபவர், புனித வேதத்தில் உறைபவர், சம்ருத்தியான உணவில் உறைபவர், பாக குடத்தில் உறைபவர், பிரம்மா முதலிய தேவதைகளில் உறைபவர், புனித பலிகளில் உறைபவர், ப்ரக்ருதியில் உறைபவர், நீரினங்களில், பூமியில், விடுதலையடைந்த விவேதிகளிடம் உறைபவர், மலைகளில் தோன்றுபவைகளிடையே உறைபவர், வேதங்களால் அறியப்படுபவர், எண்ணற்ற குணங்களைக் கொண்டிருப்பவர். விளக்கம் : பரமாத்மாவின் குணாதியங்களின் மஹிமைகள் இங்கு விளக்கப்படுகிறது. ஸ்லோகம் : 3 அவர் ப்ராணனை மேலே இயக்குகிறார். அபானனை கீழே தள்ளுகிறார். மத்தியிலிருந்து கொண்டு வாமனனாகப் பெயர் பெறும் அவரை எல்லா தேவதைகளும் பூஜிக்கின்றன. விளக்கம் : பிராணனைக் கட்டுப்படுத்தும் பரமாத்மாவைப் பற்றி விளக்கப்படுகிறது. இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் பரமாத்மா முன்னால் கூறப்பட்ட கட்டை விரல் அளவுள்ளவனாக வர்ணிக்கப்பட்டவரே ஆவார். ஸ்லோகம் : 4 நசிகேதன் கேட்கிறான் : பெளதீக உடல் மற்றும் நுட்ப உடலிலிருந்து ஜீவன் வெளியேறிவிட்டால் இங்கே என்ன மிஞ்சும்? இது அதுவே. விளக்கம் : முதலாவது அத்தியாயம் ஸ்லோகம் 19ல் கேட்கப்பட்ட கேள்வி இங்கே குறிப்பாக மறுபடியும் கேட்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றால் இது தொடர்பான முழு விவரைத்தையும் தெரிவிக்கவே. ஸ்லோகம் 5 : எந்த மனிதனும் ப்ராணனாலோ,அபானனாலோ வாழ்வதில்லை. முக்யப்பிராணரின் இருவடிவங்கள் இவைகளுக்கு முற்றிலும் வேறான எதை ஆதாரமாகக்கொண்டு, ப்ராணனும், அபானனும் மற்றும் அனைத்தும் இயங்குகின்றனவோ, அதை ஆதாரமாகக்கொண்டே மனிதன் வாழ்கிறான். விளக்கம் : முக்யப்ராணர் சாதாரணமாக ஜீவர்களை கட்டுப்படுத்துகிறார். ஆனால் அவர் அதை சுதந்தரமாகச் செய்யவில்லை. பரமாத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் ஜீவர்களைக் கட்டுப்படுத்துகிறார். பரமாத்மாவின் இந்த மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. ஸ்லோகம் 6 : ஓ நசிகேதனே ரகசியமானதும், அழிவற்றதுமான ப்ரம்மத்தைப் பற்றியும், மரணம் மற்றும் விடுதலைக்குப் பிறகு அது எவ்வாறு ஜீவர்களை கட்டுப்படுத்துகிறது என்பது பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். விளக்கம் : இது குறித்த உபதேசம் ஏற்கனவே யமனால் ஆரம்பிக்கப்பட்டு நன்கு முன்னேற்றம் அடைந்து வரும் சமயம், மேற்கண்ட வாக்குமூலமானது இச்ஸ்லோகங்களுக்கு முன்னே சொல்லப்பட்டதாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்லோகம் 7: சிலர் மேலும் மனிதப்பிறவி எடுக்கவேண்டி, மனிதர்களாக மறுபிறவி எடுக்கின்றனர். மற்றவர்கள் அவரவர்களுடைய வினைப்பயனையும், பெற்ற அறிவையும் பொறுத்தே ஸ்தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். விளக்கம் : வினைப்பயனுக்கேற்றவாறு மறுபிறவி அமையும் என்பது வலியயுறுத்தப்படுகிறது. ஸ்லோகம் 8 : புருஷன் தனக்கு விருப்பமான கனவுப்பொருள்களை உருவாக்குகிறான். தவறில்லாதவனாக அறிவிக்கப்படும் அவன் எண்ணற்ற குணங்கள் கொண்டவனாகவும், சாசுவதமாக இருக்கிறான். யாரும் அவனை கடக்க முடியாது. விளக்கம் : கனவில் செய்யப்படும் கர்மாவும், பரமாத்மாவினுடையதுதான் எனவும், அவர் விருப்பப்படிதான் கனவுகூடக் காணமுடியும் எனவும் இங்கு விளக்கப்படுகிறது. (இதன் தொடரை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காணலாம் தொடரும் ....19) 


           ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //



Wednesday, November 10, 2010

சாரல் 4 துளி 35 தேதி 21.11.10

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்ம விபூதய:/ 
ப்ராதாந்யத குருஸ்ரேஷ்ட நாஸ்யந்தோ விஸ்தரஸ்யமே
 (அத்,10-ஸ்19) 

    கீதையின் சாரலில்...விபூதி யோகம்..
                             10வது அத்யாயம்
 ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா 9ம் அத்யாயம் 4ம் ஸ்லோகத்தில் கூறுகிறார் : "இந்த உலகம் அனைத்தும் கண்கலால் காணமுடியாத உருவமுள்ள என்னால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவன்களும் ஜடப்பொருள்களும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவைகளில் நான் இல்லை". உலகம் அனைத்திலிருப்பதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிரதிபிம்மங்களே என்பதாக அறியமுடிகிறது. சென்ற ஸ்லோகத்தில் அர்சுனன், பகவானுடைய தத்ரூபங்களை விஸ்தாரமாகச் சொல்லவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறார். பகவானுடைய தத்ரூபங்கள் அவருடைய வைபவங்கள் அளவிடமுடியாதவை. ஒவ்வொரு இனத்தையும் வரைமுறைப்படுத்தி அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒருவரை அரசனாக்கி அவர்களை அதிகாரிகளாகக்கொண்டு அகில உலக விவஹாரங்களும் செம்மையாக நடைபெற பகவான் அனுகிரஹிக்கிறார். அதாவது, உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் கால்நடை பிராணியில் ஸ்ரேஷ்டமானது வ்ருஷம், குதிரையில் சிறந்தது உச்சைச்ரவஸ், விலங்குகளில் சிறந்தது சிங்கம், இவ்வாறாக அந்தந்தப் பதார்த்தங்களில் சிறந்தவையாக திகழ்வனவற்றை மட்டும் கூறினாலே கணக்கிலடங்காது என்பதால் இந்த அத்யாயத்தில் பகவானுடைய முக்கிய தோற்றங்களை மட்டுமே விளக்கப்போவதாகக் கூறுகிறார். பகவானின் சக்திகளை விஸ்தாரமாகச் சொல்லுவதற்கு எல்லையே இல்லை. பஹூநாம் ஜன்மநாமந்தே என்பதாக பற்பல பிறவிகளுக்குப் பிறகே ஒருவன் வாஸூதேவ: ஸர்வமிதி (7-19) என்பதாக அறியமுடியும் என்பதாகக் கூறியிருக்கிறார் என்பதைப் பார்த்தோம். ஒருவன் ப்ரம்மத்தை அறிய முற்படுவதைவிடவும், அல்லது மோக்ஷத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைவிடவும் சிறந்தது பகவானின் அதிஅற்புதமான லீலைகளை தெரிந்துகொள்வது. இதுவே பேரானந்தத்தைக் கொடுக்கக்கூடியது. எனவேதான் ஸ்ரீஸூகாச்சார்யர் அவர்கள் பரிக்ஷித் மஹாராஜனுக்கு ஸ்ரீமத் பாகவதக் கதையை உபாக்யாணம் செய்துகொண்டிருந்த சமயத்தில், தேவர்கள் தோன்றி "நாங்கள் அம்ருதத்தை கொடுக்கிறோம், நீங்கள் பாகவதக் கதையை எங்களுக்கு கொடுங்கள் என்று வேண்டினார்கள்". ஆனால் அம்மன்னனோ, அம்ருதத்தை நிராகரித்து முக்திக்குக் காரணமாக விளங்கும் பாகவதக் கதையை ஸ்ரத்தையாகக் கேட்க விரும்பினார். ஸ்ரீமத் பாகவதத்தில் பகவானின் அவதார லீலைகள், சக்திகள், ப்ரபாவங்கள் யாவும் உன்னதமாக விளக்கப்பட்டுள்ளது. பகவானுடைய சக்திகளை விசேஷமாகப் பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கும் தத்ரூபங்களை மட்டில் எடுத்துக் கூறப்போவதாக பகவான் இச்ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். பகவான்,அர்சுனனின் வேண்டுதலால் (முந்தைய ஸ்லோகங்கள்) மிகவும் சந்தோஷமடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : குருவம்சத்தில் சிறந்தவனே அர்சுனா நீ இவ்வாறு கேட்டதைப்பற்றி நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். என்னுடைய விபூதியின் தத்ரூபங்கிளின் விஸ்தாரத்திற்கு எல்லையே இல்லை என்பது பிரஸித்தம். என் தெய்வத் தன்மையுள்ள விபூதிகளில் நன்றாக ப்ராசிக்கச் செய்துகொண்டிருக்கும் ரூபங்களை மட்டும் உனக்குச் சொல்கிறேன்.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                                                                                          இங்கே ஒரு துளி : பகவான்ஸ்ரீகிருஷ்ணர்-  :கர்மங்கள் அனைத்தையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய். பக்தியுடன் என்னையே நித்யமும் த்யானம் செய் (அத்12.ஸ்6). என்னிடம் ப்ரேம பக்தி செய்பவனை மரணமெனும் சம்சாரக் கடலிலிருந்து மீட்பேன் (ஸ்7)  புத்தியையும் மனதையும் என்னிடம் வைத்தால் ஐயமின்றி என்னிடம் வாழ்வாய் (அத.12 ஸ்.8) மனதை நிலைநிறுத்த முடியாதுபோனால், அப்யாச யோகத்தினால் என்னை அடைய   முயற்சிசெய்(அத்.12.ஸ்9)  

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
                  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //




Friday, November 5, 2010

சாரல் 4 துளி 34 தேதி 14.11.10

கீதையின் சாரலில்----- விபூதி யோகம்----
                                 10வது அத்யாயம்
விஸ்தரேணாத்மநோ யோக3ம் விபூதிம் ச ஜநார்தந/
பூய: கதய: த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மேs ம்ருதம்// (அத் 10 ஸ்லோ.18)

முந்தைய அத்யாயங்களில் சொன்னதைவிட இன்னும் விஸ்தாரமாக கூறு ஜநார்தனா ! என்று விளம்புகிறார் அர்சுனன். அம்ருதம் போன்ற உன் வார்த்தைகளில் கூறவேண்டுமாய் பிரார்த்திக்கிறார். ஜநார்தனா என்றால் துஷ்ட ஜனங்களை அழிப்பவர், ஸம்ஸாரத்தை அழிப்பவர், பிறப்பில்லாதவர், பக்த ஜனங்களால் ப்ரார்த்திக்கப்படுபவர். மோக்ஷத்தைக் கொடுப்பவர் என்று பொருள். பகவான் இவ்வுலகில் பல்வேறாக வ்யாபித்திருக்கும் சக்தியே இங்கு யோகம் எனப்படுகிறது. அந்த மஹாசக்தி யின் விரிவாக்கமே விபூதி என்பதாகும். மஹா சக்தி மற்றும் விபூதியின் தத்துவ அறிவு பக்தியை உண்டாக்கும்.இந்த ரகஸியத்தை தெரிந்துகொண்டு அர்சுனன் மேலும் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று வேண்டுகிறார். பகவானைப் பற்றிய அறிவு, லீலைகள், ப்ரபாவங்கள், விபூதிகள் யாவும் திரும்பத்திரும்ப கேட்டாலும் புதியதான விஷயத்தைக் கேட்பதுபோலவே இருக்கும். அவைகள் தெகட்டவே தெகட்டாது. அம்ருதத்தை உண்டாலும் தெகட்டிவிடும், ஆனால் பகவானை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவன் மனதில் உதித்து விட்டால் அவைகள் ஆனந்தத்தையே கொடுக்கும். போதும் என்ற உணர்வே இருக்காது. பகவானே வழிகாட்டியாக நிற்கிறார். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அர்சுனன் பகவானின் வார்த்தைகளால் பகவானைப் பற்றியதான விபூதிகளை விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறார். பகவானின் வார்த்தைகள் அம்ருதமாய் இனிக்கிறது. இதைக் கேட்பதற்கு பக்தியும் ஆர்வமுமே முக்கியமாகிறது. லெளகீக விஷயங்களும், பொளதீகப் பொருட்களும் என்றும் அழியக்கூடியது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியதான அறிவு மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது. இதை ஸ்ரீவ்யாஸபகவான் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பதைக் காணலாம். ஸ்ரீமத் பாகவதம் 03-25-36 ல் ஸ்ரீகபிலதேவர் தமது தாய் தேவஹூகதிக்கு உபதேசிக்கிறார் , "எனது உண்மையான பக்தர்கள் எனது பல்வேறு வடிவங்கள். அவர்கள் எனது எழில்மிகு முகத்தையும், உடலையும் காண்பதில் ஆனந்தம் அடைகின்றனர். என் லீலைகள், பார்வை, புன்சிரிப்பு, யாவும் அவர்களுக்கு ஆன்மீக உணர்வை கொடுக்கிறது. அதனால் அவர்களின் மனங்கள் என் சிந்தனையில் ஆழ்கிறது. அவர்களின் வாழ்வை எனக்கு அர்ப்பணிக்கிறார்கள். இவர்கள் முக்தியை அல்லது வேறு இன்ப சுகங்களை வேண்டுவதில்லை. இருந்தபோதிலும், அவர்களுக்கு என் லோகமான ஸ்ரீவைகுண்டத்தில் இடமளிக்கிறேன்" என்று கூறுகிறார். ஸ்லோகத்தின் உட்கருத்து : ஹே ஜனார்த்தன ! உன்னுடைய வல்லமை, சக்தி யாவும் உன்னுடைய ஸன்னிதானத்தினால் அந்தந்த பதார்த்தங்களுக்கு ஸ்ரேட்டமான தத்துவத்தைக் கூறிக்கொண்டே அவைகளிலிருக்கும் தத்ரூபங்களை விஸ்தாரமாகச் சொல்லும். உன்னுடைய வாக்யம்ருதத்தை கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு திருப்த்தியில்லை-அர்சுன உவாச-
இங்கே ஒரு துளி : பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஹே அர்சுனா! உன் சிந்தனையை என்னிடத்திலேயே வை. என்னைக் குறித்தே பக்தியைச் செய். நீ செய்யும் யாக-யக்ஞங்களை எனக்கு ஸமர்ப்பணம் செய். நீ செய்யும் நமஸ்காரங்களை எனக்கு மட்டுமே செய். இப்படியாக எனக்காகவே உன் கைங்கரியங்களை செய்துகொண்டிருந்தால் என்னையே அடைவாய். இது ஸத்யம்(18-65). யாருடைய உள்ளம் எப்போதும் கீதையில் ஆனந்தம்பெறுகிறதோ, அவனே அக்னி தேவதையை பூஜித்தவனாகிறான். அவனே இடைவிடாது ஜபம் செய்தவனாகிறான். அவனே செய்யவேண்டிய எல்லா கர்மங்களையும் பூர்ணமாகச் செய்தவனாகிறான் மேலும் எல்லாம் உணரப்பெற்ற பண்டிதனாகிறான்-ஸ்ரீகிதாமஹாத்ம்யம்-
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
                  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //