Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, November 20, 2010

சாரல்:4: துளி:36 நாள்: 28.11.10

   காடகோபநிஷத் (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)

ஸ்லோகம் 15 : தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதைப்போன்றதாக ஆகிறதோ, ஓ நசிகேதா, அவ்வாறு முனிவர்களுள் முதல்வராக இருக்கிற (வாயு) யாரை அறிகிறாரோ அவரைப்போன்றே பரமாத்மா ஆகிறார். விளக்கம் : விடுவிக்கப்பட்ட ஜீவன்கள் பரமாத்வை போன்று ஆகிறார்களே தவிர பரமாத்மாவை ஒத்தவராக ஆவதில்லை. பரமாத்மாவை அறிந்தவர்களுள், முதன்மையானவர்களும், பரமாத்மாவை அறிந்த மற்றவர்களின் தலைவர்களாகவும் உள்ள சதுர்முக பிரம்மனும், வாயுவும், விடுதலைக்குப்பிறகு, பரமாத்வை போன்ற தன்மை உள்ளவர்களாக ஆவார்களே தவிர பரமாத்மாவுடன் ஒன்றாகமாட்டார்கள். ஆகையால் மற்ற ஜீவர்கள் பரமாத்மாவுடன் ஐக்கியனாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. (இரண்டாவது அத்யாயம் முதற்பகுதி முற்றிற்று) இரண்டாவது அத்யாயம் -இரண்டாம் பகுதி :
ஸ்லோகம் 1 : பதினொரு வாயிற்களையுடைய இந்த உடம்பை பிறவாதவனும், சர்வஞ்னனுமான பகவான் கட்டுப்படுத்துகிறார் என்பதை உறுதியாக அறிபவன் துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறான். ஏற்கனவே விடுவிக்கப்பட்டவனான (தேக அபிமானத்திருந்து) அவன் இறுதி லட்சியத்தை அடைகிறான். இது அதுவே. விளக்கம் : உடம்பு முதலியன பரமாத்மாவின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அதை தனது என்று ஒருவன் அபிமானிக்காமல் இருக்க வேண்டும் என்பது இந்த ஸ்லோகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (11 வாயில்கள் என்பது கண் 2 ;காது 2 ; நாசித்துவாரங்கள் 2 ;முகம், நாபி, ஆசனம், குறி, தலை ஆக 11 என்பதாக ஸ்ரீவேதேச தீர்தத ஸ்வாமிகள் கூறுகிறார்) கடவுள் இயல்பை பற்றிய விவரணம் : ஸ்லோகம் 2 : அவர் குற்றங்கள் அற்றவர், அனைத்தின் சாரம், வாயுவில் உறைபவர், பேரின்பமயமானவர், ஆகாயத்தில் உறைபவர், புலங்களில் உறைபவர், புனித வேதத்தில் உறைபவர், சம்ருத்தியான உணவில் உறைபவர், பாக குடத்தில் உறைபவர், பிரம்மா முதலிய தேவதைகளில் உறைபவர், புனித பலிகளில் உறைபவர், ப்ரக்ருதியில் உறைபவர், நீரினங்களில், பூமியில், விடுதலையடைந்த விவேதிகளிடம் உறைபவர், மலைகளில் தோன்றுபவைகளிடையே உறைபவர், வேதங்களால் அறியப்படுபவர், எண்ணற்ற குணங்களைக் கொண்டிருப்பவர். விளக்கம் : பரமாத்மாவின் குணாதியங்களின் மஹிமைகள் இங்கு விளக்கப்படுகிறது. ஸ்லோகம் : 3 அவர் ப்ராணனை மேலே இயக்குகிறார். அபானனை கீழே தள்ளுகிறார். மத்தியிலிருந்து கொண்டு வாமனனாகப் பெயர் பெறும் அவரை எல்லா தேவதைகளும் பூஜிக்கின்றன. விளக்கம் : பிராணனைக் கட்டுப்படுத்தும் பரமாத்மாவைப் பற்றி விளக்கப்படுகிறது. இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் பரமாத்மா முன்னால் கூறப்பட்ட கட்டை விரல் அளவுள்ளவனாக வர்ணிக்கப்பட்டவரே ஆவார். ஸ்லோகம் : 4 நசிகேதன் கேட்கிறான் : பெளதீக உடல் மற்றும் நுட்ப உடலிலிருந்து ஜீவன் வெளியேறிவிட்டால் இங்கே என்ன மிஞ்சும்? இது அதுவே. விளக்கம் : முதலாவது அத்தியாயம் ஸ்லோகம் 19ல் கேட்கப்பட்ட கேள்வி இங்கே குறிப்பாக மறுபடியும் கேட்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றால் இது தொடர்பான முழு விவரைத்தையும் தெரிவிக்கவே. ஸ்லோகம் 5 : எந்த மனிதனும் ப்ராணனாலோ,அபானனாலோ வாழ்வதில்லை. முக்யப்பிராணரின் இருவடிவங்கள் இவைகளுக்கு முற்றிலும் வேறான எதை ஆதாரமாகக்கொண்டு, ப்ராணனும், அபானனும் மற்றும் அனைத்தும் இயங்குகின்றனவோ, அதை ஆதாரமாகக்கொண்டே மனிதன் வாழ்கிறான். விளக்கம் : முக்யப்ராணர் சாதாரணமாக ஜீவர்களை கட்டுப்படுத்துகிறார். ஆனால் அவர் அதை சுதந்தரமாகச் செய்யவில்லை. பரமாத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் ஜீவர்களைக் கட்டுப்படுத்துகிறார். பரமாத்மாவின் இந்த மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. ஸ்லோகம் 6 : ஓ நசிகேதனே ரகசியமானதும், அழிவற்றதுமான ப்ரம்மத்தைப் பற்றியும், மரணம் மற்றும் விடுதலைக்குப் பிறகு அது எவ்வாறு ஜீவர்களை கட்டுப்படுத்துகிறது என்பது பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். விளக்கம் : இது குறித்த உபதேசம் ஏற்கனவே யமனால் ஆரம்பிக்கப்பட்டு நன்கு முன்னேற்றம் அடைந்து வரும் சமயம், மேற்கண்ட வாக்குமூலமானது இச்ஸ்லோகங்களுக்கு முன்னே சொல்லப்பட்டதாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்லோகம் 7: சிலர் மேலும் மனிதப்பிறவி எடுக்கவேண்டி, மனிதர்களாக மறுபிறவி எடுக்கின்றனர். மற்றவர்கள் அவரவர்களுடைய வினைப்பயனையும், பெற்ற அறிவையும் பொறுத்தே ஸ்தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். விளக்கம் : வினைப்பயனுக்கேற்றவாறு மறுபிறவி அமையும் என்பது வலியயுறுத்தப்படுகிறது. ஸ்லோகம் 8 : புருஷன் தனக்கு விருப்பமான கனவுப்பொருள்களை உருவாக்குகிறான். தவறில்லாதவனாக அறிவிக்கப்படும் அவன் எண்ணற்ற குணங்கள் கொண்டவனாகவும், சாசுவதமாக இருக்கிறான். யாரும் அவனை கடக்க முடியாது. விளக்கம் : கனவில் செய்யப்படும் கர்மாவும், பரமாத்மாவினுடையதுதான் எனவும், அவர் விருப்பப்படிதான் கனவுகூடக் காணமுடியும் எனவும் இங்கு விளக்கப்படுகிறது. (இதன் தொடரை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காணலாம் தொடரும் ....19) 


           ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //



No comments:

Post a Comment