பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
துளி:5, தேதி:11.09.11
கீதையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன யோகம் (11ம் அத்யாயம்)
அத்யாயச் சுருக்கம்: (சென்ற இதழின் தொடர்ச்சி...) விஷ்ணுவே! தேவ தேவ! ஜகத்பதியே! உமது இந்த ரூபத்தைக் கண்ட உடன் நான் மிகவும் நடுநடுங்கிப் போனேன். இதனால் எனக்கு துணிவும் சுகமும் இல்லை. அமைதியும் எனக்கில்லை. நான் திக்ப்ரமம் பிடித்தவனைப் போலிருக்கிறேன். உலகாளுகின்ற மன்னர் கூட்டமும், திருதாஷ்டிரருடைய புத்திரர்கள் அனைவரும், அப்படியே பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும்கூட எமது யுத்த வீரர்களும் உமது முகங்களில் வந்து விழுகிறார்கள். சிலர் உமது கோரைப்பற்களின் நடுவில் சிக்கிக்கொண்டு தலை துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். ஸமுத்திரத்தை நோக்கியே நதிகள் திரண்டோடுவதைப்போல, இவ்வுலக வீரர்கள் யாவரும் ஜ்வலிக்கும் உன் வாயில் புகுகிறார்கள். விட்டில் பூச்சிகள் நாசமடைவதற்காக சுடர்விட்டு எரியும் தீயில் புகுவதைப் போல, உலகத்துயிர்கள் யாவும் நாசமடைவதற்காகவே உன் வாயில் வந்து விழுகின்றன. உமது கனல் வீசும் முகத்தால் உலகனைத்தையும், உயிர் வாழும் கூட்டங்களையும் விழுங்குகிறாய். மிகவாக ரத்தம் பெருகும் உதடுகளை நாவால் நக்குகிறாய். இவ்வாறாக உக்ரரூபத்துடன் தோன்றும் நீர் யார்? எனக்கு அறிவிப்பாயாக. தேவ ஸ்ரேஷ்டனே! உனக்கு நமஸ்காரங்கள். எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன். உன்னை அறிவதற்கு விரும்புகிறேன். உன் செயல்பாடுகளை என்னால் அறியமுடியவில்லை.
பகவான்: (பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கோரரூபத்தை எடுத்ததற்கான காரணத்தைச் சொல்லுகிறார்) ஹே! அர்சுனா! இப்பிரபஞ்சத்தை ஸம்ஹாரம் செய்வதற்காக கால தேவனாய் இருக்கிறேன். இப்போர்களத்தில் நின்றிருக்கும் போர் வீரர்கள் அனைவரும் என்னால் மரணமடையப் போகிறார்கள். (இப்போரில் பாண்டவர்கள் ஐவர், அஸ்வத்தாமா, க்ருபாச்சார்யர், க்ருதவர்மா ஆகியோர் தவிர மற்றோர்கள் இறப்பது திண்ணம் என்பதை அர்சுனனுக்கு முன்கூட்டியே அறிவிக்கிறார்) உன் எதிரிகளைக் கொன்றுவிடுவதோ அல்லது விடுவிப்பதோ உன்கையிலில்லை. அவ்வாறு எண்ணினாயானால் அது உனது அஜ்ஞானமே யாகும். எனவே நானே யாவற்றையும் நாஸம் செய்யும் சக்திகொண்டவனாய் இருப்பதால் நீ யுத்தம் செய்வதற்கு எழுந்திரு. ஸத்ருக்களை அழி. பெயரையும் புகழையும் அடைவாயாக. இப்போர் வீரர்கள் எல்லோரும் முன்னமே என்னால் கொல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, நீ வெறும்காரணன் மாத்திரமே என்பதை அறிவாயாக. இருகைகளால் போர்புரியும் வீரனே அர்சுனா! துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்றும் உள்ள போர் வீரர்களையும் என்னால் கொல்லப்பட்டவர்களைப் போலிருக்கின்ற இவர்களைக் கொல்வாய். பயப்படாதே. வருந்தாதே. யுத்தம்செய். போரில் எதிரிகளை வெல்பவனாக இரு.
ஸஞ்சயன்:-(திருதராஷ்ரரிடம்கூறுகிறார்) கேசவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்சுனன் மிகவும் நடுக்கமுற்றவனாயும் பயந்தவனாயும் கைகூப்பி வணங்கி மிகவும் பவ்யமானக் குரலில் கூறலானான்.
அர்சுனன்:- ஹ்ருஷீகேச! உன்னுடைய கீர்த்தியால் உலகமனைத்தும் சந்தோஷமடைகிறது. மக்கள் உன்னிடத்தில் அன்பு செலுத்துகிறார்கள். ராக்ஷஸர்கள் பயந்து ஓடுகிறார்கள். ஸித்த கணங்கள் உன்னை வணங்குகிறார்கள். யாரையும்விட மேலானவன் நீ. பிரம்மனைப் படைத்தவன் நீ. உன்னை நமஸ்கரிப்பதில் ஆச்சிர்யம் ஏதுமில்லை. எல்லையற்றவன் நீ. ஜகத்திற்கு இருப்பிடமானவன் நீயே. உண்மையும் இன்மையும் அதற்கும் மேலானவனும் நீயே. ஆதிதேவ! தேவர்களுக்கும் தேவன் நீ. என்றும் அழியாத ஆத்மஸ்வரூபியான பரம புருஷன் நீ. இப்பிரபஞ்சத்தின் ஆதாரம் நீயே. யாவற்றையும் அறிகிறவனும் அறியவேண்டியவரும் நீயே. பரமபதம் என்று சொல்லப்படுகின்ற வைகுண்டமும் நீயே. எல்லையற்ற ரூபத்துடன் நீயே இப்பிரபஞ்சம் முழுவதும் வ்யாபித்திருக்கிறாய்.
வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி நீரே. பிரம்மாவிற்கு தந்தை நீ. உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள். தேவதேவனே! ஆயிரம் முறையும் உமக்கு நமஸ்காரங்கள். அதற்கும் அதிகமாகவும் உமக்கு நமஸ்காரங்கள். (மீண்டும் மீண்டும் பகவானை நமஸ்கரிக்கிறான் அர்சுனன்) ஹே லோகநாதா! உன் பெருமைகளையும், இந்த விஸ்வரூபத்தையும் அறியாதவனாக இருந்துவிட்டேன். உன்னிடம் அதிகமான அன்புகொண்டு உன்னை அன்னோன்ய நண்பனாக நினைத்தேன். அதனாலோ என்னவோ, உன்னை “அடே கிருஷ்ணா” அடே யாதவா” “அடே நண்பா” என்றெல்லாம் துடுக்குத்தனமாய் விளித்திருக்கிறேன். யாவற்றையும் பொருத்தருளவேண்டும். நான் பரிஹாசமாகக் கூறியதையும், வேடிக்கையாக அவமதித்ததையும் க்ஷமித்தருள வேண்டும். நான் உன்னுடன் விளையாடியது, படுத்துறங்கிறது, உண்பது, வீற்றிருப்பு யாவற்றையும் பொருத்தருளவேண்டும். என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்.
ஒப்பற்ற பெருமை பெற்றவனே! கோவிந்தா! இப்பிரபஞ்சத்திற்கு தகப்பன் நீ. பூஜைக்குரியவர் நீ. மூவ்வுலகங்களிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உனக்கு மேலான வேறொருவருண்டோ?
ஆகையால் தேவதேவா! நான் என் உடலைத் தாழ்த்தி மண்டியிட்டு நமஸ்கரிக்கிறேன். ஸர்வேஸ்வரா! பூஜைக்குரியவரே! நீர் என்னிடம் கிருபை செய்ய வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன். மகன் செய்த பிழையைத் தந்தை பொறுப்பதுபோலும், நண்பன் செய்யும் ஏளனத்தை நண்பன் பொறுப்பது போல, மனைவி செய்த அபராதத்தை கணவன் பொறுப்பது போல உமக்கு அறியாமையால் நான் செய்த தவறைப் பொறுத்தருளவேண்டுகிறேன். (இன்னும் உள்ளது)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வதோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வதோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே//
No comments:
Post a Comment