Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Sunday, March 6, 2011

சாரல் : 4 துளி : 49 நாள்: 06.03.11


கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
உச்சை: ஸ்ரவஸமஸ்வாநாம் வித்தி4 மாமம்ருதோத்3 ப4வம்/
ஐராவதம் க3ஜேந்த்3ராணாம் நராணாம் ச நாரதி4பம்// (அத்.10.ஸ்லோகம் 27

"குதிரைகளுள் உச்சைஸ்ரவஸ்; யானைகளுள் ஐராவதம்; மனிதர்களுள் அரசன் நான் எனத் தெரிந்துகொள்".
உச்சைஸ்ரவஸ்: ஒரு சமயம் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது முதலில் விஷமும் பிற்பாடு அமிர்தமும் கிடைத்தது. அமிர்தம் உண்டானபோது அதிலிருந்து உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை தோன்றியது. இது குதிரைகளில் மிகவும் ஸ்ரேஷ்டமானது. இதை பகவான் தன் ஸ்வரூபமாக காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
ஐராவதம்: சிறப்பு மிக்க யானையை கஜேந்திரன் என்பவர் கஜேந்திரன் என்ற யானையின் கால் முதலையின் வாயில் சிக்கி சுமார் ஆயிரம் ஆண்டுகள் மீளமுடியாமல் உயிருக்கு போராடியது. இறுதியில் அது ஞானம் பெற்று ஆதிமூலநாராயணா என ஸ்தோஸ்திரம் செய்ததும் பகவானே நேரில் காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார் என்பது பாகவதக் கதைகளில் கஜேந்திர மோக்ஷம் சிறப்பு பெற்றது. அந்த கஜேந்திரன் என்னும் யானைகளில் சிறந்தது ஐராவதம். இது இந்திரனின் வாகனம். இதுவும் அமிர்தம் கடையும்போது தோன்றியது. பகவான் இதன் ரூபமாகக் காட்சியளிப்பதாகத் தெரிவிக்கிறார்.
மனிதர்களுள் அரசன்: அயோத்தியை ஆண்ட அவதாரபுருஷர் பகவான் ராமசந்திரமூர்த்தி, துவாரகாபுரீஸ்வரர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, யுதிஷ்ரர், பரீக்ஷித்து மற்றும் இவர்களின் வழிவந்தவர்கள் மக்களுக்காக மக்களின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்தவர்கள். இவர்கள் தெய்வீக தகுதிபெற்றவர்கள். பொதுவாக சிறப்புபெற்ற அரசர்கள் பகவானின்பிரதிநிதிகள். தற்காலத்தில் மன்னராட்சி முறை முடிவிற்குகொண்டுவரப்பட்டு, நாடு குடியரசு பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் அரசாங்கம் அமைகிறது. இதில் சுயநலம், சுகபோகமுமே மேலோங்கி நிற்கிறது. ஹிரண்யகசிபு சுமார் 71 ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாக பாகவதத்தில் கூறப்படுகிறது. ஹிரண்யகசிபு பகவானின் த்வேஷியாக இருந்தான், ஆனால் தர்மங்களையும், நியாயங்களையும் கடைபிடித்து யக்ஞங்களையும் யாகங்களையும் அனுமதித்தவனாயும், பித்ரு ஸ்ரார்தங்களைக்கூட செய்யச் சென்னவனாய் இருந்தான். இறுதியில் அசுரத்தன்மை மேலோங்கி தெயவபக்தி இல்லாமல் போனதால் அவன் பகவானால் வதம்செய்யப்பட்டான். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : குதிரை இனங்களில் பாற்கடலில் பிறந்த உச்சைஸ்ரவத் என்னும் குதிரைக்கு இதர குதிரைகளைவிட ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு உச்சைஸ்ரவத்தில் இருக்கிறேன். யானைகளில் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானைக்கு அதிமுக்யத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, வைகுண்டத்திலிருக்கும் 'ஐர' என்னும் குளத்தை ரக்ஷித்துக் கொண்டு ஸ்ரீலட்சுமி தேவியை காப்பவனாய் "ஐராவதம்" என்னும் யானைக்குள் இருப்பதாகத் தெரிந்துகொள். மனிதர்களின் தலைவன் நானேயாதலால், மனிதர்களில் சக்ரவர்த்திகளுக்கு அதிமுக்யத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு சக்ரவர்தியில் இருப்பதாக என்னைத் தெரிந்துகொள். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : குருக்ஷேத்ர போரில் கீதையின் உதயம் : பாண்டவர்களுக்குக் கிடைத்த அளவற்ற செல்வத்தையும், நன்மதிப்பையும் கண்டு துர்யோதனன் மிகவும் பொறாமையும், பேராசையும் கொண்டான். அவைகளை அபரகரிக்கும் நோக்கில் பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைத்தான். சகுனியின் உதவியுடன் வஞ்சனை செய்து ராஜ்யத்தையும் கவர்ந்துகொண்டான். பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் முடித்து வந்தால் ராஜ்யத்தை திருப்பிக்கொடுப்பதாக சுதாட்டத்தின் முடிவில் வாக்களித்தான். அவ்வாறே பாண்டவர்கள் பதின்மூன்றாண்டுகளை முடித்தனர். ராஜ்யத்தைத் திருப்பிக்கேட்டனர். ஆனால் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டான் துர்யோதனன். பாண்டவர்கள் நிர்கதியாய் நின்றார்கள். யுத்தம் செய்து ராஜ்யத்தை மீட்டுக்கொள்ள முடிவுசெய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் தூது : பரமாத்மன் ஸ்ரீகிருஷ்ணர் இரு தரப்பினருக்கும் சொந்தக்காரர். எனவே சமாதானம் பேச த்ருதிரபாஷ்ரரின் சபைக்குச் சென்றார். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அங்கே ராஜ உபசாரம் அளிக்கப்பட்டது. பீஷ்மர், திரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் போன்ற மஹான்கள் நிறைந்த சபையில், ஸ்ரீகிருஷ்ணர் த்ருதிராஷ்ரனைப் பார்த்து, 'நீ துர்யோதனனை அடக்கி வாசிக்கச் சொல், நான் பாண்டவர்களைப் பார்த்துக்கொள்கிறேன் சமாதானமாகச் சென்றுவிடுவோம்' என்று கேட்டுக்கொண்டார். த்ருதராஷ்ரனுக்கு இதில் மனமில்லை. துர்யோதனனிடம் சிறிது அச்சமிருந்தது போலும். மண்ணாசையும் இடம் கொடுத்தது. எனவே ஸ்ரீகிருஷ்ணரின் சமாதானப் பேச்சு அங்கே எடுபடவில்லை. அச்சபையில் கூடியிருந்த மஹான்கள் எல்லாம் பரமாத்மனான ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சைக் கேட்கச் சொல்லி த்ருதராஷ்ரனுக்கு அறிவுரை கூறினார்கள். இறுதியாக ராஜா த்ருதிராஷ்ரனை அவர்கள் ஆமோதித்தார்களே தவிர யுத்தத்திற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. வந்திருப்பது சாக்ஷாத் பரமாத்மனே என்பதை அறிந்தும் கூட பீஷ்மர், த்ரோணாச்சார்யார், க்ருபாச்சாரியார் போன்றோரும் ஸ்ரீகிருஷ்ணரின் சமாதானக் குரலுக்கு உடன்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணருக்கு கோபம் உண்டானது. 'சரி அதுபோகட்டும் ஐந்து நகரங்களையாவது தானமாகக் கொடு போரை நிறுத்தி விடுவோம்' என்று கேட்டார் ஸ்ரீகிருஷ்ணர். குண்டூசி குத்தக்கூட இடம் கொடுக்க முடியாது என்று திடமாக மறுத்துவிட்டார் த்ருதராஷ்டர். உடனே அவருக்கு தன் விஸ்வ ரூபத்தைக் காண்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். மாயையால் உந்தப்பட்ட த்ருதிராஷ்டர் அப்போதும் சமாதானத்திற்கு வரவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் அங்கிருந்து கர்ணனிடம் வந்து தன்பக்கம் வந்துவிடுமாறு அழைத்தார். 'நான் செஞ்சோற்றுக் கடன்' தீர்க்கப்போவதாகக் கூறி மறுத்துவிட்டான். இறுதியாக யுத்தம் தான் என்று முடிவாகியது. குருக்ஷேத்ரப் போர்க்களம்: குருக்ஷேத்ரம் என்ற இடம் மிகவும் பெருமை பெற்ற ஒரு விசேஷமான இடம். இது தேவர்களான அக்னி, இந்திரன், ப்ரம்மா போன்றோர் தவம் செய்த இடம், குரு மஹாராஜன் இங்கே மிகஉயர்ந்த தவம் செய்தார். இங்கே இறப்பவர்கள் மிகவும் புண்ணியாத்மாக்களாகிறார்கள். இது 'தர்மக்ஷேத்ரம்' என்றும் 'புண்யக்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது. யுத்தம் தொடங்கப் போகிறது. இருபுறமும் பதினெட்டு அக்ஷெளஹிணிப் படைகள் திரண்டு நிற்கிறது. ஒரு அக்ஷெளஹிணிப் படை என்றால் 21870 ரதங்களும், 21870 யானைப்படைகளும், 645610 குதிரைப்படையும், 1,09,350 காலாட்படை வீரர்களும் சேர்ந்த ஒரு குழுமம். இவ்வாறு பதினெட்டு அக்ஷெளஹிணி என்றால் எவ்வளவு பிரமாண்டம்? 
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாபெரும் யுத்த க்ஷேத்ரத்தின் நடுவே மாவீரன் அர்சுணன்- அக்னிதேவன் கொடுத்த தங்கரதத்தின் உச்சியில் ஹனுமனின் கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்க, அதில் சித்ரரதன் என்ற கந்தர்வனல் கொடுக்கப்பட்ட நான்கு வெள்ளை வெளேறென்ற தெய்வாம்சம் பொருந்திய குதிரைகள் பூட்டப்பட்டிருக்க, தன் கையிலே தங்கத்தாலானதும் தெய்வீகமானதும் தேவர்களால் பூஜிக்கப்பட்டதுமான காண்டீவம் (வில்) இருக்க, இத்தனைக்கும் மேலாக சாக்ஷாத் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணன் சாரதியாக அமர்ந்திருக்க- அர்சுனன் எதிரியின் படையூகத்தை பார்க்க விரும்பி அதற்கு உசித்தமாக ரதத்தை கொண்டு நிறுத்துமாறு ஸ்ரீகிருஷ்ணரை வேண்டினான். அவ்வாறே கெளரவப் படையின் முக்கியஸ்தர்கள் தெரியும்படி அந்த உயர்ந்த ரதத்தை நிறுத்தினார் ஸ்ரீகிருஷ்ணர். தன் எதிரே எதிரியாய் நிற்கின்ற உற்றார் உறவினர்களைப் பார்த்தான் அர்சுனன். அங்கே- தந்தையின் சகோதரர்கள், பிதாமகன் பீஷ்மர், ஸோமதத்தர், பாஹ்வீகர் ஆகிய பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் ஒருபக்கம் நின்றிருக்கப் பார்க்கிறான். மற்றொரு பக்கம் த்ரோணாச்சாரியார், க்ருபாச்சாரியார் போன்ற குருநாதர்களைப் பார்கிறான். இன்னும் அம்மான்கள், சகோதரருடைய புத்ரர்கள், பேரர்கள், தம்முடன் விளையாடிய மித்ரர்கள் மேலும் கூட மாமன்மார்கள், உதவிசெய்ய வந்திருக்கும் படை வீரர்கள் சூழ்ந்த மாபெரும் படையை பார்கிறான் அர்சுனன். உடனே பாசம் அர்சுனனைக் கவ்விக்கொண்டது. துக்கம் அவனை பீடித்தது. மனம் கலங்கிறது. ரோமங்கள் சிலிர்த்தது. உடல் நடுங்கியது. கையிலிருந்த வில் கைநழுவ, அவனால் ரதத்தில் நிற்கக்கூட முடியாமல் சோர்ந்து அழுத கண்களுடன் ரதத்தின் படியினில் உட்கார்ந்துவிட்டான். (தொடரும்....) 

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத// 
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

No comments:

Post a Comment