வேதாநாம் ஸாமவேதோSஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:/
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா// (அத்யாம் 10 ஸ்லோகம் 22)
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனுக்கு தன்னுடைய விபூதி ரூபங்களின் தத்துவத்தை விஸ்தாரமாகக் கூறும் ஸ்லோகங்களின் தொடர்ச்சியாக இச்ஸ்லோகத்தில் "வேதங்களில் நான் ஸாம வேதமாக இருக்கிறேன்" என்று கூறுகிறார். வேதங்கள் ருக், யஜூஸ், ஸாம மற்றும் அதர்வண என்று நான்காகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸாம வேதம் என்பது இசையுடன் கூடிய மந்திரங்களைக் கொண்டது. ரிக் வேதத்தின் அனேக மந்திரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ரிக்கும், ஸாம வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ரிக்வேதம் ஞானத்தைக் கொடுக்கிறது ; அதேசமயம் ஸாமவேதம் விழிப்புணர்வுடன் கூடிய ஞானத்தைக் கொடுக்கிறது. ஸாம வேதம் 1875 மந்திரங்களைக் கொண்டது. இது இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் 1. பூர்வசிக 650 மந்திரங்களுடனும் 2. உத்திரசிக 1225 மந்திரங்களுடனும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பூர்வசிக நான்கு காண்டமாகப் பிரிந்து முறையே அக்னெய, ஐன்ற, பவமன, அரன்ய காண்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. உத்ரசிக 21 அத்யாயமாக விரிவடைகிறது. ஸாம வேதம் சங்கீதத்துடன் கூடிய சப்தங்களாக உச்சரிக்கப்படுவதுடன், இது ரிஷிகளுக்கான விதிமுறைகளைச் சொல்வதாகவும் உள்ளது. இம்மந்திரங்கள் கூர்ந்து நோக்கும் உணர்வையும், என்றும் அழியா அமைதியையும், தன்நம்பிக்கையுடன் கூடிய விழிப்புணர்வையும் மிகவும் நியர்த்தியாகவும் விசேஷமாகவும் கொடுக்கவல்லது. வேதங்களில் ரிக்வேதம் முதன்மைப்பெற்றதென்றாலும், ஸாமவேதம் வேதங்களின் வரிசையில் ஒரே இனத்தைச் சேர்ந்தது என்பதால் ஸஜாதீய ஏகதேச விபூதியாக விவரிக்கப்படுகிறது. எனவே பகவான் வேதங்களில் ஸாம வேதமாக இருக்கிறேன் என்று கூறுவதாகப் பார்க்கிறோம். மேலும் தேவதைகளில் ஸ்ரேஷ்டரான இந்திரனுக்கு நியாமகனாய் மற்ற தேவதைகளைவிட வாஸவ: என்னும் பெயருடன் இந்திரனில் இருப்பதாகவும் ; இந்திரியங்களில் உத்தமனான மனதிற்கு நியாமகனாய் 'மனதில்' இருப்பதாகவும்; பிராணிகளின் அதிக ஸ்மரண சக்திக்கு நியாமகனாய் சேதனன் என்ற பெயருடன் சேதனத்தில் இருப்பதாகவு கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : "வேதங்களுள் நான் ஸாம வேதத்திற்கு நியாமகனாய் மற்ற வேதங்களைவிட ஸாம வேதத்திற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, எதிலும் ஸமமாகவும், யாவற்றையும் அறிந்தவனாகவும் ஸாம வேத என்னும் பெயருடையவனாய் ஸாம வேதத்தில் இருக்கிறேன். அந்நிய தேவதைகளை விட இந்திரனுக்கு நியாமகனாய் முக்கியத்துவத்தைக்கொடுத்துக்கொண்டு ஸ்ரேஷ்டனாய் இந்திரனுள் இருக்கிறேன். இந்திரியங்களுள் மற்ற இந்திரியங்களை விட மனதிற்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, ஞானரூபனாய், மனஸ் ஸப்தவாச்யனாய் மனதில் இருக்கிறேன். பிராணிகளிடம் ஞானத்தைக் கொடுக்க் கூடிய அறிவாய் நான் இருக்கிறேன். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : எவன் ஒருவன் எதையும் எதிர்பார்க்காது, அகபுறத்தூய்மையுடன், பிறவிப்பயனை அறிந்து, துக்கம், அஹங்காரம் நீக்கியவனோ அவன் எனக்கு பிரியமானவன்(XII-16) மகிழ்ச்சி, வெறுப்பு, துயரம், ஆசை நீக்கி நல்லது தீயதைத் துறந்த யாவரும் எனக்கு மிகவும் பிரியமானவன்(XII-17) எவன் ஒருவன் நண்பன், பகைவன், மானபமானம், தட்பவெப்பம், சுகதுக்கங்களில் ஸமபாவபுத்தியுடையவனோ அவனும்(XII-18) இகழ்ச்சி, புகழ்ச்சி ஸமமாக பாவித்து, வீண்வார்த்தையாடபாமல், எது கிடைத்தும் பகவானின் இச்சையே என்று எப்போதும் சிந்தித்து பற்றற்று நிலைத்த புத்தியுள்ளவனோ அவனே எனக்கு பிரியமானவன்(XII-19) எவன் ஒருவன் என்னிடம் நம்பிக்கை வைத்து நானே ஸர்வோத்தமன் என்ற ஞானம் பெற்று மேற்சொன்ன தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ அந்த பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்(XII-20)
பகவான் என்பவர் யார்? செல்வம், புகழ், பலம், அழகு, அறிவு, தியாகம் இவற்றை பூர்ணமாகக் கொண்டுள்ள முழுமுதல் நபர் பகவான் எனப்படுகிறார்.
பரத்துடன் இணைப்பது யோகம். இகத்துடன் இணைப்பது காமம்.
பத்து பூதங்களால் உண்டான இந்த சரீரம் காலத்திற்கும், கர்மத்திற்கும் வசப்பட்டது. ஆகையால் நம்முடைய சரீரமே அழியும் தன்மையுடையது, மலைப்பாம்பின் வாயில் அகப்பட்டவனால் எப்படி மற்றவனைக் காக்க முடியாதோ அது போல நாம் பிறரை காப்பாற்றுவது என்பது சாத்தியமில்லை(ஸ்ரீமத் பாகவதம்)
வேதங்களால் விதிக்கப்பட்டதே தர்மம் அதனால் விலக்கப்பட்டதே அதர்மம். வேதமென்பது சாக்ஷ்சாத் நாராயணனே. தானாக உண்டானது. ஒருவறாலும் செய்யப்பட்டது அல்ல. வேதத்தை அனுசரித்து மேன்மைபெறலாம்.
No comments:
Post a Comment