Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Monday, January 10, 2011

சாரல் 4 துளி 43 தேதி 16.01.11

2011ஆராதனை ஸ்பெஷல்
ஸ்ரீ1008ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகள்

 வசுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்/
 தேவகீ பரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்//


 பாவபோதக்ருதம் ஸேவே ரகூத்தும மஹாகுரும்/ 
 யச்சிஷ்ய சிஷ்யாத்யா: டிப்பண்யாசார்ய ஸம்ஞிதா://

 ஸ்ரீஸத்யா பிக்ஜ்ஞ கராப்ஜோத்கான் பஞ்சாஸத் வர்ஷ பூஜகான்/    ஸத்யப்ரமோத தீர்த்தார்யான் நெளமி ந்யாய ஸுதாரதான்//


ஸ்ரீஹரி ஸர்வோத்தம தத்துவத்தை உலகினுக்கு எடுத்துரைத்து, மனிதனின் ஆனந்தத்திற்கும் முக்திக்கும் நேரானதொரு வழியினைக் காட்டி அருளிச் செய்த, ஸ்ரீமதாந்த தீர்த்தரெனும் ஸ்ரீமத்வாச்சார்யரின் மூல ஸமஸ்தானமான ஸ்ரீஉத்ராதி மடத்தின் 41வது பீடாதிபத்யத்தை அலங்கரித்து, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஸன்யாஸ தர்மத்தை கடைபிடித்து, வேதாந்த ஸாம்ராஜ்யத்தில் மூழ்கி, ஸ்ரீடீகாச்சார்யரின் ஸ்ரீநியாய சுதாவின் ஸாராம்ஸங்களை நித்யமும் போதனை செய்து, தமது குருவான ஸ்ரீஸத்யா பிக்ஞரின்பால் குருபக்தியும் ஸ்ரீஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளின் மீது அனன்யபக்தியும் ப்ரீத்தியும்கொண்டு, தமது சித்தாந்தத்தை த்வ்யமான முறையில் மிளிரச் செய்தவரும், ஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளின் ப்ருந்தாவனத்திற்கு அருகிலேயே தானும் ப்ருந்தாவனஸ்தராய் அமர்ந்து ஸ்ரீகுருவிற்கு ஸேவை செய்து வருபவருமான ஸ்ரீ1008ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகளின் காலம் வேதாந்த ஸாம்ராஜ்யத்தின் பொற்காலம் என்றே சொல்லப்படுகிறது.

ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகள் குத்தல் ஸ்ரீரங்காச்சார்யருக்கும் கமலாதேவி அம்மையாருக்கும் கர்நாடக மாநிலம் வரதா நதிக்கரையில் அமைந்துள்ள கர்ஜகி என்னும் கிராமத்தில் காளயுக்த்தி ஸம்வஸ்ர பாத்ரபத மாஸ கிருஷ்ணபக்ஷ பஞ்சமி திதியன்று குருராஜா என்னும் நாமகரணப்பெயருடன் இருபதாம் நூற்றாண்டின் (1948-1997) பிற் பகுதியின் நியாமகனாய், வேத வேதாந்த ஸாஸ்த்ரங்களின் எதிரொளியாய், மாத்வ சமுதாய மக்களிடையே அக்ஞானம் எனும் இருளை நீக்கவும், ஞான ஒளியை ஏற்றவும், ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சார்யர் ஆரம்பித்த ஸமஸ்தானத்தை அலங்கரிக்கவும் பிறந்தார் என்றே சொல்லவேண்டும்.

ஸ்ரீஸத்ய த்யான தீர்த்த (1911-1942) ஸ்வாமிகள் தனக்கு வயதானபடியால் ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்த (1942-1945) ஸ்வாமிகளை ஸ்ரீமடத்தின் பீடாதிபதியாக நியமித்தார். ஸ்ரீஸத்ய த்யான தீர்த்தர் வேத, வேதாந்தங்களில் மிகவும் திறமைபெற்ற மஹான். இவரிடம் சீடராக இருந்து ஸாஸ்த்ரங்களைக் கற்றவர் ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தர். ஸ்ரீகுருராஜ ஆச்சார் ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தரிடம் "நியாயா" மற்றும் வேதாந்தங்களை கற்றார். ஸ்ரீகுருராஜ ஆச்சார்(பூர்வாஸ்ரம பெயர்) "சுதா மங்களத்தை" பண்டரிபுரத்திலும் மல்கேடாவிலும் பூர்த்திசெய்தார். பிறகு ஸாஸ்த்ரங்களை (தர்க்கா, வ்யாகர்னா) மைசூரில் தாராபுரம் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி ஆச்சாரிடம் கற்றார். சென்னை அரசாங்கத்தால் நடத்தப்படும் தர்க்கசிரோமணி (Tarkashiromani) என்னும் தேர்வில் முதல் மாணவராக மிக அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சிபெற்றார்.

ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தர், ஸ்ரீகுருராஜ ஆச்சார்யரின் திறமையை மெச்சி, தனது சகோதரியின் மகளான ஸ்ரீமந்தாகினி என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தர் கூசனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேசாச்சார் என்பவருக்கு ஸ்ரீஸத்யா பிக்ஞர் தீர்த்தர் (1945-48) என்ற பட்டப்பெயருடன் ஸ்ரீமடத்தின் 40வது பீடாதிபத்யத்தைக் கொடுத்து, சைத்ர, சுத்த துவிதியை திதியில் ஆத்கூரில் ப்ருந்தாவனஸ்தாரானார். ஸ்ரீஸத்யா பிக்ஞர் தீர்த்த ஸ்வாமிகள் குத்தல் ஸ்ரீரங்காச்சார்யரின் குமாரரான ஸ்ரீகுருராஜ ஆச்சாருக்கு 02.02.1948 அன்று ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்தர் (28 வயதில்) என்னும் ஆஸ்ரமப் பெயருடன் ஸ்ரீஉத்ராதி மடத்தின் 41வது பீடாதிபத்யத்தை அருளிச்செய்தார். பிறகு ஸ்ரீஸத்யா பிக்ஞர் தீர்த்தர் புஷ்ய பகுள அஷ்டமி திதியன்று ராணேபெண்ணூர் என்னுமிடத்தில் ப்ருந்தாவனஸ்தரானார்.

ஸ்வாமிஜி ஸ்ரீமடத்தின் பீடத்தை ஏற்ற சமயம், நாடு சுதந்தரமடைந்து சில மாதங்களே முடிவடைந்த சமயம், ஸ்ரீமடம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இச்சூழ்நிலையில், வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வேத ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களை பிரசாரம் செய்ய போதிய வாகன வசதி இல்லாத காலமாக இருந்தது. இவ்வாறான நிலையில் ஸ்வாமிகள் ஸ்ரீமடத்தின் பீடத்தை ஏற்று ஸ்ரீஹரியின் மீது அசைக்க முடியாத பக்தியை வைத்தவராய், பாரதநாட்டின் வடகோடியிலிருந்து தென்கோடிவரை அங்காங்கே ஸஞ்சாரம் செய்து ஸ்ரீமதாசார்யரின் போதனைகளை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

ஸ்வாமிஜி அனேகமாக ஸ்ரீடீகாச்சார்யரின் "ஸ்ரீநியாய சுதா" விற்கு மிகவும் முக்கியத்துவம்கொடுத்து நித்யமும் பாராயணம் செய்ததுடன் சிறப்பான போதனைகளைச் செய்தார். ஸ்வாமிஜியின் போதனைகளில் முக்கியமான உபதேஸமாக ஸ்ரீஹரி ஸ்மரண, சந்தியாவந்தனம், காயத்ரிஜபம், சாலிகிராம ஸ்பர்ஷம், ஏகாதசி உபவாசம் மற்றும் ஸ்ரீமதாச்சார்யரின் க்ரந்தங்கள் பாராயணம் ஆகியவற்றை அடிக்கடி நினைவுபடுத்துவதாகவே இருந்தது. 

ஸ்வாமிஜியின் காலத்தில் ஸ்ரீமடம் பொருளாதரத்தில் வலுவடைந்தது. பக்தர்கள் ஸ்ரீகுரு பக்தியுடன் பொன்னும் பொருளும் சமர்ப்பித்தார்கள். ஆங்காங்கே நலிந்த நிலையிலிருந்த மடங்களெல்லாம் புதிய கட்டிடங்களுடனும் விஷேச பூஜைகளுடனும் புதுப்பொலிவுடன் நிவர்த்திபெற்றது. ஸ்வாமிஜி ஸ்ரீடீகாச்சார்யரின்  ஸந்நிதானத்தில் ஸ்ரீமதாச்சார்யரின் விக்ரஹங்களின் முன்னிலையில் சுமார் மூன்று மாதங்கள்  ஸர்வ மூல க்ரந்தங்களை போதனை செய்தார்கள். பிறகு ராஜகோபாலபுரத்தில் விக்ரஹங்களின் முன்னிலையில் எட்டு நாட்களில் 'மஹாபாரதத்தின்' ஒரு லட்சம் ஸ்லோகங்களை சப்தமுடன் பாராயணம் செய்தார்கள். ஸ்ரீப்த்ரிநாத் சென்று, அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஸ்ரீபத்ரிநாராயணரின் முன் அமர்ந்து ஸ்ரீமூலராமர் பூஜை செய்து, 'ப்ரம்ம சூத்ர பாஷ்யம்' மற்றும் 'ஸ்ரீகீதா பாஷ்யம்' ஆகியவைகளை முழுவதுமாக போதனைசெய்தார்கள். ஸ்வாமிஜி ஒருசமயம் ஸோன் என்னும் ஊரில் கோதவரி நதியில் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்து ம்ருத்திகா எடுத்தபோது ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸ்வர்ண விக்ரஹம் ஸ்வாமிஜியின் கையில் கிடைத்தது. அவ்விக்ரஹம் இன்றும் ஸ்ரீமடத்தில் பூஜை செய்யப்பட்டுவருகிறது. ஸ்வாமிஜி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு முக்கிய ஸ்தலங்களுக்குச் சென்று சாதூர் மாஸ்ய வ்ரதங்களை முறையாக அனுஷ்டித்தார்கள். 

ஸ்வாமிஜி அவர்கள் அனேக படைப்புக்களைக் கொடுத்திருக்கிறார்கள். 1. ஸ்ரீமந்நியாயசுதா மண்டனம் 2. யுக்திமல்லிகா விவ்ரித்தி 3. வைஷ்ணவ ஸித்தாந்தார்ஜவ 4. ஸ்ரீவிஜயீந்த்ர விஜய வைபவ 5. பாகவத நிர்தோஷாட்வ லக்ஷண 6. வாயுஸ்ருதி மண்டன 7. ப்ரம்ம ஸுத்ர ஸங்க்ரஹ போன்றவைகள் புத்தகங்களாக ஸ்ரீமடத்தின் சார்பில் மும்பையிலுள்ள ஸ்ரீஸத்யத்யான வித்யாபீடம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வாமிஜி அவர்கள் மேலும் துண்டுபிரசுரங்களாக சுமார் 40 பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்கள். அதில் முக்கியமானதாக 1. வனமாலி மிிஸ்ரா 2. ஸ்ரீபத்மநாப தீர்த்தா 3. நரஹரி தீர்த்தா மற்றும் அக்ஷசேப தீர்த்தா 4. ரிக்பாஷ்யா 4. தத்வபிரகாஷிகா 5. ஸ்ரீராகவேந்திர தீர்த்தரின் தத்வப்ராசிகா டிப்பணி 6. வாக்யார்த்தரத்னமாலா போன்றவைகள் பிரசித்தமானது.

ஸ்வாமிஜி ஸன்யாச ஆஸ்ரமத்தை அனுஷ்டித்த ஐம்பது ஆண்டுகளில் அனேக வியக்கத்தகுந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஸ்வாமிஜியை பக்தியுடன் சரணடைந்து ஸேவித்த அனேக பக்தர்கள் தங்கள் குறைகள் நீங்கி க்ஷேமமுடன் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஸ்வாமிஜி பீடத்திலிருக்கும்போதே தன் பீடத்திற்கு அதிபதியாய் பிரம்மச்சாரியான 24 வயதே நிரம்பிய ஸ்ரீஸர்வக்ஞ ஆச்சார் குத்தல் என்னும் ஒரு வேதவித்தகரைத் தேர்ந்தெடுத்து 24.4.96 அன்று திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் ஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளின் ஸந்நிதியில் ஸன்யாசம்கொடுத்து ஸ்ரீஸத்யாத்ம தீர்த்தர் என்ற பட்டப்பெயர் கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்தர் இப்பூவுலகில் பகவானின் ஸேவையையும ஸ்ரீமத்வ ஸேவையையும் இனிதே முடித்துக்கொண்டு 3.11.97 அன்று ஸ்ரீஹரிபாத ஸன்னிதியை அடைந்து மண்ம்பூண்டியில் ப்ருந்தாவனஸ்தராக இருந்து நமக்கு அருள்பாவிக்கிறார். ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமியின் ஆராதனை திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கிராமத்தில் பிணாகினி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரகூத்தம ஸ்வாமிகளின் ஸந்நிதானத்தில் கார்த்திகா சுத்த த்வ்ய திருதியை அன்று விமர்சியாக ஆண்டுதோரும் நடைபெறுகிறது.

ஸ்ரீஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளுடனான ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகளை பக்தியுடன் ஸேவை செய்வோருக்கு குறைகளை நிவர்த்தி செய்வதுடன் அருளும் ஆசியும் வழங்குகிறார் என்பதில் ஐயமில்லை. 

எய்ரஹம் ஸுகவத் ஸம்யக் ஷிக்ஷத் தோத்ஸ்மி க்ருபாலுபி:/ ஸு
தான் வந்தே ஸத் ப்ரமோதார்யான் ஸதா வித்யா குருந் மம//

இப்படைப்பினை ஸ்ரீ1008ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகளின் பாதங்களில் பணிவுடனும் பக்தியுடனும் சமர்பணம் செய்துகொள்கிறேன்.

                                                  -/ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/-

குறிப்பு : இப்படைப்பிற்கு மேற்பார்வையில் உதவிய சிறுகிராமம் துக்காஜி ஸ்ரீகுண்டாச்சார் அவர்களுக்கும், மணம்பூண்டி ஸ்ரீரகூத்தம் ஸ்வாமி மடத்தின் பூஜகர் ஸ்ரீமுரளி ஆச்சார் அவர்களுக்கும் எனது நன்றியுடன் கூடியதான நமஸ்காரங்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே//

No comments:

Post a Comment