பக்தி முரசு
ஒரு பக்க வாராந்திர இதழ்
கீதையின் சாரலில் விபூதியோகம் (10ம் அத்யாயம்)
ஒரு பக்க வாராந்திர இதழ்
கீதையின் சாரலில் விபூதியோகம் (10ம் அத்யாயம்)
தண்டோ3 த3மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ3ஷதாம் மெளநம் சைவாஸ்மி கு3ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாதமாஹம் (அத்.10ஸ்
லோ.38)
“அடக்கியாளுபவர்களிடம் தண்டநீதி நானே, வெற்றியை விரும்புவோர்களின் ராஜநீதி நான், ரகசியங்களுள் மெளனம் நான், ஞானிகளின் ஞானம் நான்”- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
ஆளும் பிரதிநிதிகளில் அனேகம் நபர்கள் உண்டு. ஸ்ரீவிஷ்ணுவே அவதார ரூபனாக ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக, ஸ்ரீகிருஷ்ணனாக அரசாட்சி செய்து மானிடர்களுக்கு செங்கோல் ஆட்சியின் மகத்துவத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். ஏனைய ஆளும் பிரதிநிதிகளில் சிறப்புத்தன்மைப் பெற்று மக்கள் போற்றும் ஆட்சியை செய்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிரதிநிதியாகிறார்கள். இங்கே தண்டம் என்பது நீதிநெறிமுறைகளுக்குட்பட்ட அடக்கியாளும் சக்தி. அதில் பகவான் “தண்டநீதி” யாக இருக்கிறார். ஒருவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் அங்கே நீதியையும் நியாயத்தையும் அவசியம் கடைபிடித்தாக வேண்டும். சில சமயங்களில் நீதியும் நியாயமும் இல்லாத இடங்களில் வெற்றி கிடைப்பது போல் தோற்றமளிக்கும், ஆனால் அது நிலையான வெற்றியல்ல. இங்கே வெற்றிபெற விரும்புவோர்களின் ராஜ நீதியாக பகவான் இருப்பதாக தெரிவிக்கிறார். ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் மெளனமாக இருப்பதே சாலச் சிறந்தது. ஒரு சில சங்கதிகளை ரகசியமாகக் காப்பாற்ற வேண்டுமென்றால் அச்சமயம் மெளனமாக இருந்து விடுதல் அவசியம். இங்கே பகவான் ரகஸியத்தை தன் ஸ்வரூபம் என்கிறார். ஜடம் மற்றும் சேதனப் பொருட்களை பாகுபாடு செய்து பகுத்தறிபவன் அறிவாளி அதுபோலவே பரமாத்மனுக்கும் ஜீவனுக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்தவன் ஞானி. இங்கே ஞானிகளின் ஞானமாக பகவான் இருப்பதாகக் கூறுகிறார். ஸ்லோகத்தின் உட்கருத்து “தண்டனை செய்பவர்களில் இருக்கும் தண்டனைக்கு நியாமகனாய் தண்டத்திலிருக்கிறேன். ஜயமடைவதற்கு விருப்பமாயிருப்பவர்களிலிருக்கும் நீதியின் ரூபமாகிய தர்மத்திற்கு நியாமகனாய் நீதியில் இருக்கிறேன். ரகசியமான வஸ்த்துக்களிலிருக்கும் அதிஉத்தமமான தியானத்திற்கு நியாமகனாய் மெளனத்திலிருப்பவன், ஞானிகளின் அறிவிற்கு நியாமகனாய், ஞானத்திலிருப்பவன்நானே” –பகவான்ஸ்ரீகிருஷ்ணன்-
இங்கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 10) (படைப்பு: ஆதிமைந்தன்) மணிமந்தன் என்பவரால் இயற்றப்பட்ட பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு கண்டனம் தெரிவித்து, அதிலுள்ள தோஷங்களை விளக்கி, அந்த பாஷ்யத்தில் கூறப்பட்டவைகள் அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாம் என்றும், ஆனால் அதில் விஷ்ணு சர்வோத்தம தத்துவம் இல்லை என்பதால் மற்றவர்கள் அதை பின்பற்றுவது அபத்தமானது என்று விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட அங்கிருந்த பண்டிதர்கள், பிரம்ம சூத்ரத்திற்கு சரியான பாஷ்யத்தை எழுத வேண்டுமாய் விண்ணப்பித்தார்கள். குருவான அச்சுதப்ரோக்ஷரும் கூட, ஆசார்யர் அவர்களைப் பார்த்து, “பிரம்மசூத்ரத்திற்கு கூறப்பட்ட பாஷ்யங்கள் அனைத்திலும் தோஷம் உள்ளது என்று கூறுவதால், நீரே அதற்கு ஆட்க்ஷேபம் செய்ய முடியாததான பாஷ்யத்தை செய்க” என்று கூறினார். ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள் வாதத்தின்போதும் அல்லது மற்ற சமயங்களிலும் தன்னுடைய கருத்தை பலவந்தமாக திணிக்க வேண்டும் என்ற எண்ணமோ, அல்லது தன்னை எதிர்கொள்பவர்களை கீழ் நிலைப்படுத்தி உதாசீனம் செய்யவேண்டும் என்ற நோக்கமோ அற்றவறாய், வேதங்களிலும், பிரம்ம சூத்ரங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்ட உண்மையான பராபரத் தத்துவத்தை தகுந்த ஆதாரங்களுடன், தெளிவாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும், கோபப்படாமலும், நட்பாகவும் விவாதித்து பதில்கொடுத்து, வாதிட வந்தவர்களுக்கு தேவையான அவகாசத்தையும் கொடுத்து, வாதத்தில் அவர்களுடைய பொருள் குற்றத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களே தன்தவறை உணரும்படி செய்தார் என்றே சொல்லவேண்டும். ஸ்ரீமதாச்சார்யரின் புகழ் திக்கெட்டும் பரவ, அதைக்கேட்ட, ஞானியான மத்யகேஹர், தன் மகனான ஸ்ரீமத்வரை பார்த்து, அவர் வாதிடும் திறமையை மெச்சி, அவர் கூறும் உபன்யாசங்களைக் கேட்டு ஆனந்தமடைந்தார். தீர்த்த யாத்திரை: ஸ்ரீமதானந்த தீர்த்த மஹான் தன் குருவுடன் உடுப்பிக்கு தெற்கேயுள்ள விஷ்ணுமங்களம் என்ற கிராமத்திற்குச் சென்று மங்களத்தையும் மோக்ஷத்தையும் ப்ரசாதமாகக் கொடுக்கக் கூடிய ஸ்ரீமஹாவிஷ்ணுவை துதித்தார். இவ்விடத்தில் ஒருவர் ஆச்சார்யர் அவர்கள், பீமசேனனைப் போல் அதிகமாக உண்பார் எனக் கேள்விப்பட்டு, அவரை பரீட்சிக்க, அவர் வையிறு நிரம்ப உணவருந்திய பிறகு, இருநூற்றுக்கும் மேல் வாழப் பழங்களை கொடுத்து உண்ணச் சொன்னார். ஸ்ரீமதாச்சார்யர் இடைவெளியில்லாமல் எல்லா பழங்களையும் தின்றுவிட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமலிருந்தைக் கண்ட குரு “உன்னால் எப்படி எந்த துன்பமும் இல்லாமல் இருக்க முடிகிறது, அதன் உண்மையைக் கூறு“ எனக் கேட்டார். அதற்கு ஸ்ரீமத்வர்,“அங்குஷ்ட மாத்ரம் ஜடரே ப்ரதிஷ்டிதம்” (5-32) என்பதாகக் கூறினார். அதாவது எனக்கு ஜீரண சக்தியைக் கொடுக்கக் கூடிய அக்னி ஒரு கட்டைவிரல் அளவு உள்ளது என்றும் ஆனால் மற்றவர்களுக்கோ ஒரு பொறி அளவே இருக்கும் என்றும் கூறினார்.
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
No comments:
Post a Comment