பக்தி முரசு ( ஒரு பக்க வாராந்திர இதழ்)
இதழ் ஆசிரியர்: ஆதிமைந்தன்
இணை ஆசிரியர்: வாயுமித்ரன்
இதழ் ஆசிரியர்: ஆதிமைந்தன்
இணை ஆசிரியர்: வாயுமித்ரன்
ஸ்ரீகிருஷ்ணாவதார மஹிமை ( 21.08.2011 கோகுலாஷ்டமி ஸ்பெஷல்)
(சென்ற 2010ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியைன் போது சாரல் 04, துளி 23 தேதி 29.08.10 மற்றும் சாரல் 04, துளி 24 தேதி 05.09.10 ஆகிய இதழ்களில் வெளிவந்த ஸ்ரீகிருஷ்ணாவதார மஹிமை தொடர்ந்து இத்தொடரைப் பார்க்கலாம்)
ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்தில் குழந்தையாகத் தோன்றிய பொழுது வ்ருந்தாவனத்தைச் சேர்ந்த கோபியரும் கோபாலர்களும் மகிழ்ச்சியடைந்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். பகவான் அங்கே அவதாரம் எடுத்திருந்ததால் கோகுலம் லக்ஷ்மி கடாக்ஷமாக காட்சியளித்தது.
பூதனாவின் வதமும் ஸ்ரீகிருஷ்ணரின் தயாள குணமும்
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாள் விழாவை கோலாகலமாகக் கொண்டாடிவிட்டு, நந்தகோபர் மதுராவிற்குச் செல்லப் புறப்பட்டார். அங்கு சென்று கம்ஸனுக்கு வருடாந்திர வரி செலுத்தவேண்டும் என்பது அவரது எண்ணம். முன்பாக கோகுலவாசிகளின் நன்மைக்காகவும், தன் இரு குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், அங்கிருந்த முக்கியஸ்தர்களை அழைத்து கோகுலத்தில் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிப் புறப்பட்டார். நந்தகோபர் மதுராவை அடைந்த சேதியைக் கேட்ட வசுதேவர் அவரைப் பார்க்கச் சென்றார். வசுதேவருக்கு உரிய மரியாதை அளித்து இருவரும் குசலம் விசாரித்துக்கொண்டார்கள். கம்ஸனின் திட்டம் வசுதேவருக்குத் தெரிந்திருந்தது. கம்ஸன் பசுக்களையும், குழந்தைகளையும் மேலும் விஷ்ணுவின் பக்தர்களையம் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தது வசுதேவருக்குத் தெரிந்திருந்ததை நந்தருக்கு சூசகமாக அறிவித்தார். நந்தகோபரின் பாதுகாப்பில் இருந்த ஸ்ரீகிருஷ்ணரையும், பலராமரையும் நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டுமாறு விண்ணப்பித்துக்கொண்டார். மேலும் கம்ஸனிடம் வரிகளைச் செலுத்திவிட்டு உடனே கோகுலம் திரும்புவது மிகவும் நல்லது என்று எச்சரித்தார். நந்தகோபர் தன் வேலைகளை முடித்துக்கொண்டு வ்ருந்தாவனம் வந்துகொண்டிருந்தார்.
இதற்கிடையில், கம்ஸன் பூதனா என்னும் அரக்கியை அழைத்து தன் எல்லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் குழந்தைகளைக் கொன்றுவிடுமாறு உத்திரவிட்டான். “கேசரீ” என்று அழைக்கப்படும் சூனியக்காரியான பூதனா என்ற அரக்கி மிகவும் கொடுமைக்காரி. மாயாசக்தி கொண்டவள். ஆகாயத்தில் பறக்கக்கூடியவள். இப்படிப்பட்டவள் தன்னை ஒரு அழகிய பெண்ணாக, தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு நந்தகோபரின் அரண்மனைக்குள் பிரவேசித்தாள். புன்னகை முகத்துடன் மிகவும் அழகானவளாக தோற்றம் கொண்டதால் அவளை யாரும் சந்தேகிக்கவில்லை. தடுக்கவுமில்லை. நேரடியாக ஸ்ரீகிருஷ்ணர் இருக்குமிடத்திற்கு வந்தார். அங்கே குழந்தை படுக்கையில் இருந்தது. குழந்தை கிருஷ்ணர் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். உலகமனைத்தையும் பரிபாலனை செய்யும் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணருக்கு நடப்பது, நடக்கவிருப்பது, நடக்கப்போவது யாவும் தெரியும். பூதனா தன்னை கொல்ல வந்திருப்பதையும் அறியாதவரல்லார் ஸ்ரீகிருஷ்ணர். இருந்தாலும், அவர் பூதனாவைப் பார்க்க விரும்பவில்லை என்றும் பொருள்கொள்ளலாம், அல்லது ஸ்ரீகிருஷ்ணரின் ஞானக் கண்பார்வை அவளின் மீது பட்டாலும்கூட பூதனாவின் நோக்கம் குலைந்துவிடும் என்பதாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெண்ணை வதம் செய்வதென்பது சாஸ்திர விதிமுறைகளுக்கு ஒவ்வாததையும் கருத்தில் கொண்டு கண்களை மூடிக்கொண்டவாறே குழந்தையாகிய ஸ்ரீகிருஷ்ணர் படுத்துக்கிடந்தார் என்றே தோன்றுகிறது. குழந்தை ஸ்ரீகிருஷ்ணருக்கு விஷப் பாலூட்டி கொல்லும் நோக்கத்தில் வந்ததாலும்கூட அந்த அரக்கியை தன் தாயாக நினைத்தார். இதுவே பகவானின் கருணை. இதைத் தொடர்ந்து பூதனா ஸ்ரீகிருஷ்ணரை கையால் எடுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டாள். அச்சமயம் மாதா யசோதாவும், ரோகிணியும் அங்கே இருந்தார்கள். பூதனாவின் அன்பான நடிப்பு அவர்களை சந்தேகிக்கச் செய்யவில்லை. சக்திவாய்ந்த விஷம் தடவிய தன் மார்புக் காம்புகளை பூதனா ஸ்ரீகிருஷ்ணரின் வாயில் திணித்தாள். விஷம் வாயில் பட்டதும் குழந்தை இறந்துவிடும் என்று நினைத்தாள். ஏனென்றால், அவள் எந்தெந்த குழந்தைக்கு விஷம் கலந்த பாலையூட்டினாலோ அக்குழந்தைகள் எல்லாம் உடனே ரத்தமாமிசமெல்லாம் சுண்டிப்போய் மரணமடையும். அவ்வாறே இக்குழந்தையும் மரணமடையும் என்று நினைத்தாள். ஆனால் குழந்தை ஸ்ரீகிருஷ்ணரோ பூதனா தனக்களித்த பாலுடன் அவளின உரிரையும் சேர்த்து உறிஞ்சிவிட்டார். ஆம், பூதனாவின் உடலில் இருக்கும் பால் அனைத்தையும் உறிஞ்சி அவளைக்கொன்று, அவள் மேலும் மேலும் அரக்க ஸ்பாவச் செயல்களைச் செய்யவிடாமல் தடுத்தார். பூதனாவின் உயிர் அவளின் உடலைவிட்டு பிரிந்தவுடன், அவள் அரக்க குரலுடன் “என்னை விட்டுவிடு” என்று மரணக்குரல் எழுப்பி கீழே சாய்ந்தாள்.
பூதனாவின் உடல் சுமார் 12 மைல் நீளம் வரை கீழே விழுந்தது. அவளது உடல் மலைபோன்று இருந்தது. அது கீழே சாய்ந்தபோது இடையில் அகப்பட்ட மரங்கள் அனைத்தும் கீழே மடிந்தன. இதைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சிர்யமடைந்து பிரமித்து நின்றார்கள். அவளின் பற்கள் உழப்பட்ட நிலங்களைப்போலக் காணப்பட்டது. அவளின் நாசித்துவாரங்கள் மலைக் குகைப் போலவும், மார்பகங்கள் சிறு குன்றுகளைப்போலவும், கண்கள் ஆழமில்லாத கிணறுபோலவும், அவளின் முடிசிவப்பான செடிப்புதர்போலவும், தொடைகள் ஒரு ஆற்றின் இரு கரைகளைப்போலவும், இருகைகள் பாலங்களைப்போலவும் காட்சியளித்தது. அவளின் உடலை துண்டம் துண்டமாக வெட்டி எரியூட்டியபோது அதிலிருந்து நறுமணம் வீசியது. இவ்வளவு பெரிய பரமாண்டமான உடலை கற்பனை செய்தாலும் பயம் தோன்றும். ஆனால் இறந்த அவளின் உடல் மீது ஸ்ரீகிருஷ்ணர் விளையாடிக்கொண்டிருந்தார். சிவனும், பிரம்மனும் ஸ்ரீகிருஷ்ணரை ப்ரபுவாக வணங்குகிறார்கள். ரிஷிகளும், பகவானின் பக்தர்களும் ஸ்ரீகிருஷ்ணரை அன்புடன் சேவிக்கிறார்கள்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
No comments:
Post a Comment